ADVERTISEMENT

“மேகதாது விவகாரத்தில் திமுக, அதிமுக அரசியல் செய்கின்றன” - சித்தராமையா

11:49 PM Dec 16, 2023 | mathi23

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டுக் காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு போராடி வருகிறது. இந்த நிலையில், மேகதாது அணையால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கர்நாடக சட்டசபையின் குளிர்காலத் கூட்டத்தொடர் பெலகாவியில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் (14-12-23) மேல்சபையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் பா.ஜ.க உறுப்பினர் என். ரவிக்குமார், மேகதாது திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே. சிவக்குமார் பதிலளித்துப் பேசினார். அதில் அவர், “நமது நீர், நமது உரிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாம் போராடுவோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் நம்மை விட தமிழகத்திற்குத்தான் அதிக நன்மை கிடைக்கும்.

ADVERTISEMENT

மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது. ஆனால், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் இந்த திட்டத்தை அமல்படுத்த முடியாது. அதனால், மத்திய அரசு இந்த திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும். இதற்கு பா.ஜ.க.வும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த திட்டத்தால் காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இதனால், நமக்கும் நெருக்கடியான நிலை வராது” என்று கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, ”பெங்களூர், பெலகாவி, மாண்டியா, மைசூரு உட்படப் பல நகரங்களுக்கு குடிநீர் விநியோகம் மற்றும் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மட்டுமே மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணை முழுக்க முழுக்க கர்நாடக எல்லைக்குள் உள்ள பகுதியில் அமைகிறது. இதில் தமிழகத்திற்கு ஒரு துளி கூட பாதிப்பு இல்லை. மாறாகத் தமிழகத்திற்குத்தான் பயனாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதற்காக திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT