நாடு முழுவதும் 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமான இன்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவில் அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மகள் ஷோபனா வாக்களிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து வந்து வாக்களிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால் வாக்களிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வீடியோ ஒன்றில் அவர் பேசும்போது, “ எனது வாழ்நாளில் இந்திய குடிமகளாக இது மிக மோசமான நாளாகும். நான் வாக்களிப்பதற்காக வெளி நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். எனது வாக்கு நீக்கப்பட்டுள்ளது. எனது வாக்கு முக்கியமில்லையா? இது மிகப் பெரிய குற்றம். யார் இங்கு அனைவரையும் முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள். இதனை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்றார்.