/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kotta-art.jpg)
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதனையொட்டி சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய் உயரழுத்த மின்கம்பி மீது உரசியுள்ளது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து குழந்தைகளை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சிவராத்திரியை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 17 சிறுவர்கள் படுகாயமடைந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ராஜஸ்தான் அமைச்சர் ஹீரலால் நாகர் கூறுகையில், “ இது மிகவும் வருத்தமளிக்கும் சம்பவம். இரண்டு குழந்தைகள் பலத்த காயம் அடைந்துள்ளனர். ஒருவர் 100% தீக்காயம் அடைந்துள்ளார். அனைத்து விதமான சிகிச்சையும் அளிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கோட்டா போலீஸ் எஸ்.பி. அம்ரிதா துஹான் கூறுகையில், “இது மிகவும் சோகமான சம்பவம். காளிபஸ்தியைச் சேர்ந்த மக்கள் தங்கள் கலசத்துடன் இங்கு கூடியிருந்தனர். ஒரு குழந்தை சுமார் 20 முதல் 22 அடி வரை உயரமுள்ள குழாயை வைத்திருந்தது. இந்த குழாய் உயர் அழுத்த கம்பியை உரசியுள்ளது. அந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற அங்கு இருந்த குழந்தைகள் அனைவரும் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிறப்புமுன்னுரிமை அடிப்படையில்முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஒருவர் 100% தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாரேனும் அலட்சியமாக இருந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)