
கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து 38 நாட்டிக்கல் கிலோ மீட்டர் தொலைவில் கடல் அலையில் நேற்று (24.05.2025) கடும் சீற்றம் காணப்பட்டது. கடல் அலையின் சீற்றம் காரணமாக லைபிரியா நாட்டுக்குச் சொந்தமான எம்.எஸ்.சி. எல்சா 3 என்ற கப்பலில் அதிகமாக நீர் ஏறியது. இதனால் வலதுபுறமாக நேற்று சுமார் 26 டிகிரி சாய்ந்தது. இதன் காரணமாகக் கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் சில கடலில் கலந்தன. அதே சமயம் கப்பலில் இருந்த பெரும்பாலான மாலுமிகள் நேற்று மீட்கப்பட்டன. அதில் இருந்த 3 பேர் மட்டும் கப்பலில் இருந்தனர்.
அதாவது மீட்புப்பணிகள் மேற்கொள்ளும் போது அவர்களின் உதவி தேவைப்படும் என்று கேப்டன் உட்பட 3 பேர் கப்பலில் இருந்தனர். இன்று (25.05.2025) காலை அந்த கப்பலானது மேலும் வலதுபுறம் சரிந்து கடலில் மூழ்கத் தொடங்கியுள்ளது. இதனால் கப்பலில் எஞ்சியிருந்த கப்பலின் கேப்டன் உட்பட 3 பேரும் மீட்கப்பட்டனர். இதன் மூலம் கப்பலில் இருந்த 24 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலை இந்தியக் கடலோர காவல் படையானது தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த கப்பலில் சுமார் 640 கண்டெய்னர்கள் உள்ளன. அதில் சுமார் 13 கண்டெய்னர்களில் நச்சு ரசாயனங்கள் இருப்பதாகக் கப்பல் நிறுவனமானது தெரிவித்துள்ளது. அதோடு கப்பலின் பயன்பாட்டிற்காக சுமார் 84 மெட்ரிக் டன் டீசலும், சுமார் 300 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யும் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கப்பல் ஆழமாக மூழ்கும் பட்சத்தில் முதலில் கப்பலின் பயன்பாட்டுக்கு வைத்துள்ள டீசல் மற்றும் கச்சா எண்ணெய் தான் முதலில் கடலில் கலக்கும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதனை எவ்வாறு சமாளிப்பது?. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்று இந்தியக் கடலோர காவல் படை ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் கப்பலை மேலும் மூழ்காமல் தடுக்கும் வகையில் கப்பலை நிலை நிறுத்துவதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. எம்.எஸ்.சி. கப்பல் நிறுவனத்தின் 2 கப்பல்கள் மீட்புப் பணிகளுக்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மீட்புப் பணிக்கு உதவுவதற்காக இந்தியக் கடலோர படைக்குச் சொந்தமான 3 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.