A ship on fire in the middle of the ocean kerala

கேரளாவின் கோழிக்கோடு அருகே சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த ‘எம்.வி.வான் ஹை 503’ என்ற சரக்கு கப்பல், கொள்கலன் சரக்குகளை ஏற்றிக் கொண்டு கடந்த ஜூன் 7ஆம் தேதி இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தில் இருந்து கிளம்பியது. 270 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல், வரும் ஜூன் 10ஆம் தேதி மும்பையை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (09-06-25) காலை கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்தது.

Advertisment

இதையடுத்து, இந்திய கடலோர காவல்படை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கப்பலில் மொத்தம் 22 பேர் இருந்த நிலையில், 18 பேரை கடலோர காவல்படை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மீதம் காணாமல் 2 தைவான் நாட்டவர்கள், ஒரு மியான்மர் நாட்டவர் மற்றும் 1 இந்தோனேசியர் நாட்டவரையும் காவல்படை தீவிரமாக தேடி வருகின்றனர். மீட்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று நடுக்கடலில் திடீரென்று கவிழ்ந்தது. கடலில் விழுந்த சரக்கு கப்பலில் இருந்த 640 கண்டெய்னர்களில், 13 கண்டெய்னர்களில் மிகவும் ஆபத்தான நச்சுத்தன்மை கொண்ட ரசாயணம் இருந்ததால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. அந்த ரசாயணம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதை பேரிடராக கேரளா அரசு அறிவித்தது.