“இந்தியாவின் மகள்களை சித்திரவதை செய்வதிலிருந்து பா.ஜ.க. பின்வாங்கியதில்லை” - ராகுல்

shied away from torturing the daughters of India Rahul gandhi

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டும், அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன்பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டினை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. விசாரணை குழுவானது விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. ஆனாலும் சரண் சிங் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23ம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்திற்கு இந்திய விளையாட்டு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது குறித்து மல்யுத்த வீராங்கனைகள் 7 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்த போது, உடனடியாக வீராங்கனைகளின் புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று உறுதியளித்தது. இதையடுத்து பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒரு வழக்கு 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு போராட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதாக மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குடிபோதையில் டெல்லி போலீஸ் சீருடையில் வந்த சிலர் தங்களை தாக்கியதாகவும், குறிப்பாக மல்யுத்த வீராங்கனைகளை அடித்து துன்புறுத்தியதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த வன்முறையில் இருவர் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டின் விளையாட்டு வீரர்களிடம் இதுபோன்ற நடத்தை மிகவும் வெட்கக்கேடானது; பாஜகவின் 'பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள்' என்பது வெறும் போலித்தனம்; உண்மையில், இந்தியாவின் மகள்களை சித்திரவதை செய்வதிலிருந்து பா.ஜ.க. ஒருபோதும் பின்வாங்கியதில்லை” எனத்தெரிவித்துள்ளார்.

wrestlers
இதையும் படியுங்கள்
Subscribe