Skip to main content

பட்ஜெட் எதிரொலி: பங்குச்சந்தைகள் கிடுகிடு உயர்வு... ஒரே நாளில் 5 லட்சம் கோடி ஜாக்பாட்; முதலீட்டாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி!!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

Sharemarket trend on Monday

 

பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிளுக்கு மறுமூலதனம், உள்கட்டமைப்பு திட்டங்கள், கோவிட் தடுப்பூசி கண்டுபிடிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளால் இந்திய பங்குச்சந்தைகள் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீட்டெண்கள் 'கிடுகிடு' என உயர்ந்தன. திங்களன்று (பிப்.1) ஒரே நாளில், குறிப்பிட்ட பங்குகளின் மதிப்பு 5.20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

அமெரிக்க பங்குச்சந்தை, ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாபத்தை எதிர்பார்த்து அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் தொடர்ந்து 6 செஷன்களில் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதனால் கடந்த வாரம் கிட்டத்தட்ட 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. கரோனா உச்சத்தில் இருந்தபோது கூட இந்த அளவுக்குப் பங்குகள் மதிப்பு சரிந்ததில்லை. 

 

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதிலும், பங்குச்சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இல்லாததால், கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளும் சரிவுடனேயே முடிந்தது.

 

இந்நிலையில், மத்திய பட்ஜெட் அறிக்கை நாடாளுமன்றத்தில் பிப்.1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில், பொதுத்துறை வங்கிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் மறுமூலதனம் நிதியுதவி, கரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு, ஜவுளிப்பூங்கா, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை திட்டங்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் இந்திய பங்குச்சந்தைகளில் சாதகமாக நம்பிக்கையை ஏற்படுத்தின.

 

இதனால் வர்த்தகம் தொடங்கிய முதலே தேசிய பங்குசந்தை (நிஃப்டி), மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தன. 

 

கடந்த வெள்ளியன்று (ஜன. 20) சென்செக்ஸ் குறியீட்டெண் 46,285 புள்ளிகளில் முடிவுற்ற நிலையில், பட்ஜெட் தாக்கல் நாளான நேற்று (01 பிப்.) 46,617.95 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது. ஒரு கட்டத்தில் 48,764 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் இறுதியில் 48,600.61 புள்ளிகளில் முடிவடைந்தது. குறைந்தபட்சமாக 46,433 புள்ளிகள் வரை சென்றது. 

 

ஒரே நாளில், சென்செக்ஸ் 23,14.84 புள்ளிகள் வரை உயர்ந்தது. அதாவது சென்செக்ஸ் ஒரே நாளில் 5 சதவீதம் வரை உயர்ந்தது. இதன்மூலம் சென்செக்ஸில் 5.20 லட்சம் கோடி ரூபாய் வரை பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. 

 

மும்பை பங்குச்சந்தையில் இண்டஸ் இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பின்சர்வ், எஸ்பிஐ வங்கி, எல் அண்டு டி, ஹெச்டிஎப்சி, அல்ட்ரா சிமெண்ட், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி, ஹெச்டிஎப்சி வங்கி, எம் அண்டு எம், டைட்டான், கோட்டக் வங்கி, பார்தி ஏர்டெல், என்டிபிசி, ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனப் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.

 

அதேநேரம், ஹிந்துஸ்தான் லீவர், டெக்மஹிந்திரா, டாக்டர் ரெட்டி பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.

 

தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியும் கிடுகிடுவென உயர்ந்தது. நிஃப்டி குறியீட்டெண் 13,758 புள்ளிகளில் தொடங்கியது. அதிகபட்சமாக 14,336 புள்ளிகள் வரை சென்று, வர்த்தகத்தின் இறுதியில் 646.60 புள்ளிகள் ஏற்றத்துடன் 14,281.20 புள்ளிகளில் முடிவுற்றது. இது, 4.74 சதவீதம் ஏற்றமாகும். 

 

நிஃப்டியில் பட்டியலிடப்பட்டுள்ள 50 நிறுவனங்களில் 45 நிறுவன பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. 5 நிறுவன பங்குகள் சரிவடைந்தன. பட்ஜெட்டின் தாக்கம் நடப்பு வாரம் முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரிவிலிருந்து இந்திய பங்குச்சந்தைகள் மீண்டதால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்