
மகாராஷ்டிரா மாநிலத்தில், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸை இரண்டாக உடைத்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பா.ஜ.க மற்றும் சிவசேனா தலைமையிலான அணியில் அஜித் பவார் கடந்த 2023ஆம் ஆண்டு இணைந்தார். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தங்களுக்கே தேசியவாத காங்கிரஸ் கட்சி கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார் மற்றும் அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது.
அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் அஜித்பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவித்தது. அதன் பிறகு, தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்தர பவார் என்ற பெயருடன் சரத் பவார் தனி அணியுடன் செயல்பட்டு வருகிறார். சரத் பவாரின் சகோதரர் மகனான அஜித் பவார் அரசியலில் வேறு பாதையில் சென்றாலும், தீபாவளி போன்ற குடும்ப நிகழ்வுக்கு சரத் பவார் வீட்டிற்கு வந்து கலந்து கொள்வார். இதனால், இருவரும் ஒரு அணியில் சேருவார்கள் என்பது அவ்வப்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், சரத் பவார் மற்றும் காங்கிரஸ் அடங்கிய கூட்டணி அதிக தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும், அதனை தொடர்ந்து நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், அந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனால், மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை காங்கிரஸ் மற்றும் சரத் பவார் அடங்கிய கூட்டணி இழந்தது. இது சரத் பவாருக்கு பெரிய அடியாக இருந்தது.
அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா அடங்கிய மகாயுதி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைபற்றியது. இதன் மூலம், அம்மாநிலத்தில் பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் மற்றும் சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் துணை முதல்வர்களாக பொறுப்பு வகித்தனர். மகாயுதி கூட்டணிக்குள் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டாலும், கூட்டணியை கைவிடாமல் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி நடத்தி வருகிறார். அதே சமயம், அஜித் பவாரும், சரத் பவாரும் மீண்டும் ஒரே அணியில் இணையவிருக்கின்றனர் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளுக்கும் இடையே மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஊகங்களுக்கு மத்தியில், சரத் பவார் தலைமையிலான குழு, நேற்று (14-05-25) மும்பையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநிலக் குழு கூட்டத்தை நடத்தியது. மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் கட்சி குழுத் தலைவர் ஜிதேந்திர அவாத் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், மீண்டும் அஜித் பவாருடன் இணைவது குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இணைப்பு தொடர்பான விஷயங்களை கட்சி நிறுவனர் சரத் பவார் மட்டுமே முடிவு எடுப்பார் என்று கட்சி தலைமை தெளிவுப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.