ADVERTISEMENT

கொள்ளை லாபம் ஈட்டுவோருக்கு ஏழு ஆண்டு சிறை! மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!  

11:04 PM Apr 08, 2020 | kalaimohan

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். மிகவும் மோசமான இந்தக் காலகட்டத்தில் பல வியாபாரிகள், பொதுமக்களின் தேவையை உணராமல், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இது பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறாகவும், அசவுகரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT


மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஐ.ஏ.எஸ். எழுதியுள்ள இந்தக் கடிதத்தில், “பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி, இந்த இக்கட்டான தருணத்தில் உற்பத்தி, அத்தியாவசிய தேவையான உணவு, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொண்டுசெல்லும் வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளித்திருக்கிறோம். இருந்தபோதும், பல்வேறு காரணங்களால், குறிப்பாக தொழிலாளர் பற்றாக்குறையால் உற்பத்தியில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டிருப்பதாக அறிகிறோம். இந்தமாதரி சூழலில் அத்தியாவசிய பொருட்களை அளவுக்கதிகமாக பதுக்குதல், சட்டவிரோத சந்தைகளின் மூலம் விற்பனை செய்தல், அதிக வருமானம் அல்லது லாபம் ஈட்டுதல், ஊக வர்த்தகம் போன்ற காரணங்களால், அதிக விலைகொடுத்து அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT



இதனால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகள், பொதுமக்களுக்கு அத்தியாசியப் பொருட்கள் தங்கு தடையின்றியும், சரியான விலையிலும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். இதற்காக, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் – 1955-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம், சரக்கு வரம்பை நிர்ணயம் செய்தல், பொருட்களுக்கான விலையை நிலையாக்குதல், உற்பத்தியைப் பெருக்குதல், விநியோகஸ்தர்களைக் கண்காணித்தல் உள்ளிட்ட சில முக்கியமான ஏற்பாடுகளை செய்யமுடியும். அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைவாசி அல்லது பதுக்கல் போன்ற விவகாரங்களில் தவறு இழைப்பவர்களுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். மேலும், அரசுகள் ’கள்ளச் சந்தைத் தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பராமரிப்புச் சட்டம் – 1980 ஐயும் பயன்படுத்தி தவறிழைப்பவர்களுக்கு தண்டனை வழங்கலாம்.

தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, வருகிற ஜூன் 30, 2020 வரை அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் - 1955ஐ பயன்படுத்தி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை மத்திய உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் அமைச்சகம் வழங்குகிறது. பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் எந்தத் தடையோ, விலைவாசி உயர்வு போன்ற இடையூறுகளோ இல்லாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தக் கடிதம், தற்போதைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம், பொதுமக்களின் இடையூறுகளைக் குறைக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் துரிதமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT