Selvaganapathi elected as MP ... BJP in Puducherry political history

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினரான கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி முடிவடைகிறது. அதற்காக புதிய மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்வதற்காக அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் (22.09.2021) முடிவடைந்தது. இதுவரை 3 சுயேச்சைகள் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையில் மாநிலங்களவை எம்.பி. பதவியை யாருக்குத் தருவது, பெறுவது என்பதில் போட்டி நிலவிவந்தது. பாஜக தலைமை நேரடியாக முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேசியதைத் தொடர்ந்து சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

Advertisment

அதனைத் தொடர்ந்து பாஜகவின் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக மாநிலப் பொருளாளரும், முன்னாள் நியமன எம்.எல்.ஏவுமான செல்வகணபதியை கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று செல்வகணபதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரின் வேட்புமனுவை முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்களும், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக எம்.எல்.ஏக்களும் பரிந்துரை செய்தனர். சட்டமன்றச் செயலாளர் முனுசாமியிடம் செல்வகணபதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய். சரவணகுமார் மற்றும் எம்.எல்.ஏக்கள் உடனிருந்தனர்.

எதிர் தரப்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. பெரும்பான்மை பெற்றிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால் செல்வகணபதி போட்டியின்றி தேர்வாகிறார். வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படுகிறது. இதில் சுயேச்சையாக தாக்கல் செய்யப்பட்டவர்களின்மனுக்கள், எம்.எல்.ஏக்கள் பரிந்துரை இல்லாததால் தள்ளுபடி செய்யப்படும். 27ஆம் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெற இறுதி நாளாகும். அன்றைய தினம் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக செல்வகணபதி போட்டியின்றி தேர்வானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Advertisment

Selvaganapathi elected as MP ... BJP in Puducherry political history

புதுச்சேரியில் மக்களவை, மாநிலங்களவை தேர்தலில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் இதுவரை வெற்றிபெற்றதில்லை. ஆனால் பலமுறை மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டுள்ளது. புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக பாஜகவைச் சேர்ந்தவர் தேர்வாகிறார். இதன்மூலம் செல்வகணபதி புதுவையின் முதல் பாஜக எம்.பி. ஆகிறார். இதனிடையே புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் அவர், காங்கிரஸ் ஆட்சியின் நிறைவுகாலத்தில் காங்கிரசிலிருந்து விலகி என்.ஆர்.காங்கிரசில் சேர்ந்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகியிருந்த மல்லாடி கிருஷ்ணாராவ், ரங்கசாமி மூலம் மாநிலங்களவை உறுப்பினராகிவிடலாம் என கனவு கண்டார். எப்படியும் எம்.பி. ஆகிவிடுவோம் என்று எண்ணியிருந்த மல்லாடியின் கனவு பொய்யானது. ஆட்சியின் கடைசி நேரத்தில் கட்சி மாறிய மல்லாடி கிருஷ்ணாராவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காததால், காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியடைந்து, காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.