Skip to main content

"பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் தேசவிரோத சட்டம் பாயும்" - யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

yogi aditynath

 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டி கடந்த ஞாயிறன்று (24.10.2021) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.

 

இந்தப் போட்டி முடிந்து சில தினங்கள் ஆகிவிட்ட பிறகும், இந்தப் போட்டி தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்துவருகின்றன. போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாகவும், இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாகவும் ஜம்மு காஷ்மீரில் உள்ள இரண்டு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த சில மாணவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பாய்ந்துள்ளது. அக்கல்லூரி வார்டன்கள் மீதும், கல்லூரி நிர்வாகத்தில் உள்ள நபர்கள் மீதும்  சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பாய்ந்துள்ளது.

 

அதேபோல் ராஜஸ்தானில், தனியார் பள்ளி ஆசிரியரான நபீசா அத்தாரி, போட்டிக்குப் பிறகு வாட்ஸ்அப்பில் பாகிஸ்தான் அணியின் புகைப்படத்தைப் பதிவிட்டு, நாம் வெற்றிபெற்றுவிட்டோம் என பதிவிட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து நேற்று (27.10.2021) அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், பாகிஸ்தான் வெற்றிக்குப் பிறகு இந்தியாவிற்கு எதிரான கோஷங்களைப் பகிர்ந்ததற்காக ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகம், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியது அல்லது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதற்காக ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 4 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

 

இந்தநிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வென்றதைக் கொண்டாடுபவர்கள் மீது தேசத்துரோக சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்