Advertisment

போராட்டத்தில் இறங்கிய மாணவிகள்; நேரில் வந்த அமைச்சர்

School students struggle minister visit person

Advertisment

புதுச்சேரியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் நடத்திய போராட்டத்தினால் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டு அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள புஸ்ஸி சாலையில் சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று அமைந்திருக்கிறது. இந்த பள்ளி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பராமரிப்பு இன்றி கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு இடியும் தருவாயில் உள்ளது. அதனால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்புகருதி 200க்கும் மேற்பட்ட மாணவிகளை கடந்த ஆண்டே வேறு பள்ளிக்கு மாற்றியுள்ளார்கள். ஆனால், அந்த பள்ளியிலும் மாணவர்கள் அதிகம் இருப்பதால்இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த பள்ளி மாணவர்களுக்கும்இங்கிருப்பவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு அந்த பள்ளி அரை நேரமாக செயல்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், சுப்ரமணிய பாரதியார்அரசு பள்ளியைமேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது. அதனால், அரசு பள்ளிக்கு வரும் மாணவிகளை அருகில் இருக்கும் திரு.வி.க அரசு பெண்கள் பள்ளிக்கு மாற்றினார்கள். ஆனால், அந்த பள்ளியிலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் திரு.வி.க அரசு பள்ளி மாணவிகள் யாரும் இவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisment

மாணவிகளின் போராட்டம் குறித்து அறிந்த புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது அவர், “இன்னும் இரண்டு நாட்களில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். வரும் திங்கட்கிழமைக்குள் மாணவிகள் படிப்பதற்கு மாற்று அரசு பள்ளி தற்காலிகமாக அமைத்து தரப்படும். இடப்பற்றாக்குறை பிரச்சனையை தீர்ப்பதற்கு மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே பள்ளிகள் அமைத்து தரப்படும்” என்று உறுதி அளித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட மாணவிகள் அந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதேசமயம், மாணவிகள் பயின்று வந்த சுப்ரமணிய பாரதியார் அரசு பள்ளியின் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதியதாக மீண்டும் கட்டித்தர வேண்டும் என அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள்கோரிக்கை வைத்துள்ளனர்.

Pondicherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe