Advertisment

“இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை” - அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி! 

publive-image

Advertisment

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (02.08.2021) அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் சுகாதாரத்துறைச் செயலாளர் அருண், இயக்குநர் மோகன்குமார், கல்வித்துறைச் செயலாளர் வல்லவன், இயக்குநர் ருத்ரகவுடு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவருகிறது. மேலும், உலக சுகாதார நிறுவனம் மூன்றாம் அலையைத் தவிர்க்க முடியாது என எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. டெல்டா பிளஸ் வகையான தொற்று பரவத் தொடங்கியிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.

இதுபோன்ற சூழலில் பள்ளிகளைத் திறப்பது சரியாக இருக்காது. கல்லூரிகளைப் பொறுத்தமட்டில் நிறைய மாணவர்கள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. அதேபோன்று ஊழியர்கள், பேராசிரியர்கள் 85 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். இதுபோன்ற நிலையில் கல்லூரி திறப்பதில் சிக்கல் இருக்கிறது. மூன்றாம் அலையில் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கணிக்க இயலவில்லை. எனவே பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கல்லூரிகளைத் திறப்பது குறித்து விரிவான ஆலோசனை செய்தோம். மூன்றாம் அலை எப்போது துவங்கும் என்று தெரியாத சூழல் நிலவுகிறது. தற்போது 3 குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சம் மக்கள் தொகையில் முதல் டோஸ் தடுப்பூசி 1.65 லட்சம் பேருக்குப் போடப்பட்டிருக்கிறது.

இரண்டாவது டோஸ் போட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 46 ஆயிரம் ஆக இருக்கிறது. எனவே இதனை அதிகப்படுத்த கல்வித்துறையும் சுகாதாரத்துறையும் இணைந்து சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 11, 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு பள்ளி, கல்லூரிகள் எப்போது துவங்கலாம் என முதல்வர், கவர்னரை ஆலோசித்துவிட்டு அடுத்த ஒரு மாதத்திற்குப் பிறகு திறக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது.தற்போது பள்ளி, கல்லூரி திறப்பு இல்லை.

Advertisment

பள்ளிகள் 75% கல்விக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். இதனை மீறும் தனியார் பள்ளிகள் மீது புகார் கொடுத்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அறிவித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்படும். கல்விக் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பள்ளிகள் வாங்க வேண்டும். அரசின் உத்தரவை மீறும் பள்ளிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க கல்விக் கட்டண கண்காணிப்புக் குழு விரைவில் தொடங்கப்படும். பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக டோல்ஃப்ரீ எண் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது” என்றார்.

minister namasivayam Pondicherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe