Skip to main content

ஆடைகளோடு தொடுவதும் போக்சோவில் வரும் - மும்பை நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

supreme court
 

 

2016ஆம் ஆண்டு இறுதியில், 39 வயதான நபர் ஒருவர் சிறுமி ஒருவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையடுத்து, அந்தச் சிறுமியின் தாயார் இதுதொடர்பாக காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். அதன்பிறகு இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு போக்சோ சட்டத்தின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 354ன் கீழும் (பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல்) தண்டனை விதித்தது.

 

இதனை எதிர்த்து அந்த நபர் மேல்முறையீடு செய்ய, மேல்முறையீட்டை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை, ஆடைகளோடு குழந்தைகளின் உடலைத் தொடுவது பாலியல் துன்புறுத்தலில் வராது. அது இந்திய தண்டனைச் சட்டம் 354ன் கீழ்தான் வரும் என இந்த ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இதனைத்தொடர்ந்து இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், தேசிய மகளிர் ஆணையம், மஹாராஷ்ட்ரா அரசு ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்தநிலையில், இந்த மேல்முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் இன்று (18.11.2021) தனது தீர்ப்பினை வழங்கியுள்ளது.

 

ஆடைகளோடு குழந்தைகளின் உடலைத் தொடுவது பாலியல் துன்புறுத்தலில் வராது என்ற மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. தொடுதல் என்பதை தோலோடு தோல் படுவது என சுருக்குவது போக்சோ சட்டம் தொடர்பான குறுகிய மற்றும் அபத்தமான விளக்கத்திற்கு வழிவகுக்கும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும், "பாலியல் நோக்கத்துடன் ஆடைகள் வழியாக தொடுவது போக்சோ வரையறையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தெளிவான வார்த்தைகளில் தெளிவின்மையைத் தேடுவதில் நீதிமன்றங்கள் அதீத ஆர்வம் காட்டக் கூடாது" எனவும் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், விதிகளின் நோக்கத்தை முறியடிக்கும் குறுகிய விளக்கத்தை அனுமதிக்க முடியாது எனவும் கூறியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

பென்சில் வாங்க வந்த சிறுமிக்கு சேர்ந்த கொடூரம்; மளிகைக் கடை முதியவருக்கு சிறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Cruelty meted out to a girl who came to buy a pencil; Jail for grocery shop old man

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் 62 வயதான சிவா. இவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் சிவாவின் கடைக்கு சென்று பென்சில் வாங்கியுள்ளார். அப்பொழுது சிறுமியை அழைத்துச் சென்ற சிவா அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து அச்சிறுமி அவரின் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.