/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sqed.jpg)
எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு விசாரணைகளை வேகப்படுத்தக் கோரியும், கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க கோரியும் கடந்த 2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வருகிறது.
அந்தவகையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களின் அனுமதியின்றி மாநில அரசுகள் திரும்பப் பெறக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை தற்போது விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளை, மறு உத்தரவு வரும்வரை இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் சிபிஐக்கும் அமலாக்கத்துறைக்கும் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையை அமலாக்கத்துறை நேற்று சமர்ப்பித்தது. ஆனால், சிபிஐ அந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அறிக்கையைச் சமர்ப்பிக்க சிபிஐக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா, தற்போது பதவியில் இருக்கும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளைக் கண்காணிக்க சிறப்பு பென்ச் ஒன்றை அமைக்கவேண்டும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)