எஸ்.பி.ஐ. புதிய தலைவராக ரஜ்னீஸ்குமாரை நியமித்தது அரசு!
பாரத ஸ்டேட் வங்கியின் புதிய தலைவராக ரஜ்னீஸ்குமாரை அரசு நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய தேசிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் பொறுப்பின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். தற்போது இந்த பதவியில் அருந்ததி பட்டாச்சாரியா நீடித்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டோடு நிறைவடைகிறது. இந்த இடத்தை நிரப்புவதற்காக ரஜ்னீஸ்குமாரை நியமிப்பதாக அரசு இன்று தகவல் வெளியிட்டது. இவர் அடுத்த வாரம் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.
ரஜ்னீஸ்குமார் 1980ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியின் துணை மேலாளர் பதவியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளில் இருந்தவர். இவர் தற்போது நிர்வாக இயக்குனர் பொறுப்பு வகித்துவருகிறார். வருங்காலத்தில் இவர் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிகளை வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.