Skip to main content

தாத்தாவுக்கு பாரத ரத்னா விருது; அன்றே இந்தியா கூட்டணியிலிருந்து விலகிய பேரன்!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
saran singh who left the alliance with India after Bharat Ratna award to his grandfather

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இந்தியாவின் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் கடந்த 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 9 ஆவது பிரதமராகப் பதவி வகித்தவர் ஆவார். சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும் நரசிம்மராவ் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தவர். இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற நரசிம்மராவின் தொலைநோக்கு பார்வை உதவியது. வெளியுறவுக் கொள்கை உள்ளிட்டவற்றில் நரசிம்மராவ் ஆற்றிய பங்களிப்புகள் நாட்டை வழி நடத்தியது. விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் மகத்தான பங்களிப்பை அளித்தவர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆவார். இவர் சவாலான நேரத்தில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவியதில் சுவாமிநாதன் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூருக்கும், பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானிக்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், சரண் சிங்கின் பேரனும் ஆர்.எல்.டி கட்சித் தலைவருமான ஜெயந்த் சவுத்ரி இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “முந்தைய அரசுகளால் இன்றுவரை செய்ய முடியாததை பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் நிறைவேற்றி உள்ளார். எளிய மக்களை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் அரசுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் எனக்கு மிகப்பெரிய நாள்; மிகவும் உணர்ச்சிகரமான நாள். குடியரசு தலைவர், மத்திய அரசு, பிரதமர் மோடி ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

இதையடுத்து, ‘நீங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளீர்களா’ என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “கூட்டணி வாய்ப்பை என்னால் எவ்வாறு மறுக்க முடியும்? அதே நேரத்தில் தொகுதிகள் குறித்தோ, வாக்குகள் குறித்தோ பேசுவதற்கான நாள் அல்ல இது. மக்களின் உணர்வுகளையும் நாட்டின் இயல்பையும் பிரதமர் மோடி உணர்ந்து இருக்கிறார் என்பதை அவர் தனது இந்த முடிவின் மூலம் உணர்ந்திருக்கிறார்” என்று கூறி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதை உறுதி செய்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில், இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தளமும், சமாஜ்வாதி கட்சியும் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று உத்தரப் பிரதேச அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

மகளையே பாலியல் தொழிலுக்கு தள்ள விரும்பிய கொடூர தாய்; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A mother who wanted to push her daughter into incident in uttarpradesh

கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி டெல்லியில் உள்ள சாலையில், 10 வயது சிறுமி ஒருவர் தனியாக சுற்றுத்திரிந்து வந்துள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த சிலர், அந்தச் சிறுமியை அழைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, போலீசார் அந்தச் சிறுமியை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு கூறினர். அதன் பேரில், சிறுமிக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், உத்திபிரதேசம், காசியாபாத் பகுதியைச் சேர்ந்த சிறுமியினுடைய தந்தை இறந்துவிட்டார். அதன் பிறகு, சிறுமியும், அவரது சகோதரரும், தாய்வழி பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு, சிறுமியின் தாயார், சிறுமியையும், அவரது சகோதரரையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

அங்கு சிறுமியின் தாயினுடைய ஆண் நண்பர், சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவரது சகோதரரையும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இந்தக் கொடுமை காரணமாக சிறுமியின் சகோதரர், வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனிடையே, தனது தாய் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது சிறுமிக்கு தெரியவந்தது. மேலும், அவரது தாயார், சிறுமியையும் பாலியல் தொழிலுக்கு தள்ள கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்தக் கொடுமை தாங்காமல் சிறுமி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார் என்று போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தாயார் மற்றும் தாயாரின் ஆண் நண்பர் ராஜுவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயே தனது மகளை விபச்சாரத்திற்கு தள்ள கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

இந்தியாவைப் புரிந்து கொள்ள  நினைக்கும் போதெல்லாம் தமிழகத்தைப் பார்க்கிறேன்'  -நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Whenever I think to understand India, I look at Tamil Nadu' - Rahul Gandhi's speech in Nellai

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதனையொட்டி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக இன்று (12.04.2024) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தமிழ்நாடு வந்துள்ளார். சிறப்பு விமானத்தின் மூலம் மதுரை வந்த ராகுல்காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கோவை செல்ல இருக்கிறார்.

நெல்லை வந்துள்ள ராகுல் காந்தியை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில்  இந்தியா கூட்டணி சார்பில்  நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 நாடாளுமன்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பாடலை வெளியிட்டார். 

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ''எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள விரும்புகிறேனோ அப்போதெல்லாம் தமிழகத்தை பார்க்கிறேன். தமிழகத்தையும், தமிழக மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன்.  தமிழகத்தை விரும்புவதால் தான் எனது யாத்திரையை  நான் குமரியில் இருந்து தொடங்கினேன். தமிழக கலாச்சாரம், பண்பாடு என்னை கவர்ந்துள்ளது. என் மீது தமிழக மக்கள் அன்பை பொழிந்துள்ளனர். பெரியார், காமராஜர், அண்ணாதுரை, கலைஞர் ஆகியோர் தமிழ்நாட்டின் ஆளுமைகள். ஒருபுறம் பெரியார் உள்ளிட்டோர் போதித்த சமூக நீதி மறுபுறம் மோடியின் வெறுப்புணர்வு. இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடைபெறும் மோதல் இந்தத் தேர்தல். நம்மைப் பொறுத்தவரை இந்தியாவின் எல்லா கலாச்சாரமும் பண்பாடும் மிகப் புனிதமானது என்று கருதுகிறோம். ஆனால் அவர்களோ ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்பதில் குறிக்கோளாக இருக்கிறார்கள். இதனுடைய முடிவு என்னவென்றால் இந்த நாட்டில் இருக்கின்ற இளைஞர்களில் 83% பேர் வேலையில்லாமல் திண்டாட்டத்தை சந்தித்துள்ளார்கள். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநில அரசுகள் விரும்பினால் மட்டுமே நீட் தேர்வு தொடரும். வேலையில்லாத டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளுக்கும்  வேலைவாய்ப்பு பயிற்சி சட்டம் நிறைவேற்றப்படும். வந்த உடனே காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி தர மறுத்துவிட்டது. தேர்தல் ஆணையர்களை பிரதமர் தான் தேர்வு செய்கிறார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு, மீனவர்கள், விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை. ஆனால் நாட்டின் 25 பெரும் பணக்காரர்கள் 70% மக்களின் பணத்தை வைத்துள்ளனர். கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். அனைத்து துறைமுகங்கள், மின்சார தயாரிப்பு நிறுவனங்களை  அதானியிடம் ஒப்படைக்கிறார் மோடி. நாட்டின் அனைத்து அமைப்புகள், முகமைகள் ஆர்எஸ்எஸ் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. நாட்டின் அரசியல் சாசனத்தையே மாற்றுவேன் என்கிறது பாஜக'' என்றார்.