Sanjay Singh, who has been selected as the new president of the Wrestling Federation

Advertisment

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு கடந்த 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி அளிப்பதாக கடந்த 22 ஆம் தேதி (22-12-23) மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்திருந்தார். மேலும் மல்யுத்த வீரர் விரேந்தர் சிங்கும், சாக்‌ஷி மாலிக்கிற்கு ஆதரவு அளிக்கும் விதமாகத் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்திருந்தார்.

Advertisment

இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழுவை அமைத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக பூபேந்தர் சிங் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களாக எம்.எம். சோமயா, மஞ்சுஷா கன்வர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர், வீரர் - வீராங்கனைகள் தேர்வு, வங்கிக் கணக்குகளை கையாளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வர் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ள தற்காலிக குழுவை ஏற்க முடியாது. ஏனென்றால், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தன்னாட்சி அமைப்பாகும். அதனால், எனது அனுமதியின்றி இது போன்ற முடிவை எடுக்க முடியாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசிடம் நான் பேசுவேன். இதற்கு தீர்வு எட்டப்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் சட்டப்படி வழக்கு தொடருவேன். நான் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றேன்” என்று கூறினார்.