Skip to main content

'கருத்துக் கணிப்புகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்'- தேர்தல் ஆணையத்துக்கு சமாஜ்வாதி கட்சி கோரிக்கை

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

 

Samajwadi Party demands Election Commission of india

 

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சமாஜ்வாதி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

 

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. 

 

இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ள முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, "கருத்துக்கணிப்புகளை ஊடகங்களில் வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிகளுக்குப் புறம்பானது. இந்தக் கருத்துக் கணிப்புகள் வாக்காளர்களைத் திசைத் திருப்பி, தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடும். தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நடைபெறுவதற்கு கருத்துக் கணிப்புகள் நிறுத்தப்படுவது அவசியம். எனவே தேர்தல் கருத்துக்கணிப்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளது. 

 

தேர்தலில் தாம் தோல்வி அடைந்துவிடுவோம் என்பதால்தான் அகிலேஷ் யாதவ் தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்க வலியுறுத்துகிறார் என்று பா.ஜ.க. விமர்சித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Question by Dimple Yadav on Who snatched the thali of the soldiers' wives?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியும், எம்.பியுமான டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மங்களசூத்திரம் பற்றி பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும். நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அவர்களின் மனைவிகளின் மங்களசூத்திரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. புல்வாமா சம்பவத்திற்கு யார் காரணம் என்று இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு அரசு என்ன செய்தது?” எனக் கூறினார்.

Next Story

விவிபேட் வழக்கு; தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The Supreme Court ordered the Election Commission officer to appear

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

இத்தகைய சூழலில் விவிபேட் தொடர்பான இந்த வழக்கில் இன்று (24.04.2024) உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இன்று காலை இந்த இடைக்கால் உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. அதாவது ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன.

தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா. அல்லது விவிபேட்டில் உள்ளதா. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா. விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா. மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

The Supreme Court ordered the Election Commission officer to appear

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.