
17ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் ஒரு நல்ல நிர்வாகி என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் பேசியிருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சித் தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் அபு ஆஸ்மி. இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, “தவறான வரலாறு காட்டப்படுகிறது. ஔரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார். ஔரங்கசீப் ஒரு கொடூரமான தலைவர் அல்ல. ஒளரங்கசீப்பைப் பற்றி நான் படித்தது என்னவென்றால், அவர் ஒருபோதும் பொதுப் பணத்தை தனக்காக எடுத்துக் கொள்ளவில்லை. அவரது ஆட்சி பர்மா வரை பரவியது, அப்போது அந்த நாடு தங்கப் பறவை என்று அழைக்கப்பட்டது. அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்று நான் நினைக்கிறேன். அவரது படையில் பல தளபதிகள் இந்துக்கள்” என்று கூறினார்.
இவரது கருத்துக்கள் சர்ச்சையானதை தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது, “அபு ஆஸ்மி ஔரங்கசீப் ஒரு நல்ல நிர்வாகி என்று கூறியுள்ளார். சத்ரபதி சம்பாஜி மகாராஜ் ஒரு தேசபக்தர் மற்றும் உண்மையான தேசியவாதி என்பதால் இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஔரங்கசீப்பின் நிர்வாகத்தை நல்லது என்று சொல்வது கடுமையான குற்றம். இதற்காக அபு ஆஸ்மி மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் ஒரு தேசபக்தருக்கு எதிராகப் பேசியுள்ளார், எனவே, அவர் தேச விரோதி என்றும் முத்திரை குத்தப்பட வேண்டும். இது கண்டிக்கத்தக்கது. சத்ரபதி சம்பாஜி மகாராஜை 40 நாட்கள் சித்திரவதை செய்த ஔரங்கசீப்பை நல்லவர் என்று சொல்வது பாவம். அபு ஆஸ்மி மன்னிப்பு கேட்க வேண்டும், முதல்வர் இதை தீவிரமாக எடுத்துக் கொண்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்களான சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.