sachin pilot team releases a video of their support mlas

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் கூட்டத்தையும் சச்சின் பைலட் புறக்கணித்துள்ளார்.

Advertisment

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. யார் முதல்வர்? எனும் போட்டியில் வெற்றிபெற்று அம்மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றார். பதவியேற்ற நாளிலிருந்தே இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. வெளியில் தெரியாமல் உட்கட்சிப்பூசலாக இருந்துவந்த இந்தப் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

இதனையடுத்து 30 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறும் சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப்பெறுவார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ராஜஸ்தான் மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில், நேற்று காலை அம்மாநில முதல்வர் அசோக் கேலாட்டின் வீட்டின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. பெரும்பான்மைக்கு 100 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற சூழலில், இந்தக் கூட்டத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து அசோக் கெலாட் ஆதரவாளர்கள் அனைவரும் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் சொகுசு விடுதி ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், அந்த விடுதியில் இன்று தொடங்கிய இரண்டாவது காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் கூட்டத்திலும் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவில்லை. இதனிடையே சச்சின் பைலட் தனக்கு இருக்கும் எம்.எல்.ஏக்கள் ஆதரவை வெளிக்காட்டும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சச்சின் பைலட்டின் முகாமில் சுமார் 15 முதல் 18 எம்.எல்.ஏக்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் அந்த வீடியோ அவரது சமூகவலைத்தள குழுவில் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது எனத் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.