Advertisment

“பா.ஜ.க என்னை பற்றி கவலைப்பட தேவையில்லை” - சச்சின் பைலட்

 Sachin Pilot says BJP should stop worrying about me

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றதில் இருந்தே அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே உட்கட்சி மற்றும் ஆட்சி தொடர்பாக மோதல் தொடர்ந்து வருகிறது.

Advertisment

அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போது துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 18 பேர் போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் தலையீட்டையடுத்து துணை முதல்வர் மற்றும் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அதனையடுத்து முதல்வர் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் இணைந்து செயல்பட காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியது. இதையடுத்து ஒன்றாக இணைந்து செயல்பட்டு வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “சச்சின் பைலட்டுக்கு எதிராக காங்கிரஸில்வெறுப்பு வெளிப்படுகிறது. காங்கிரஸில் நடக்கும் தவறுகளுக்கு எதிராக குரல் எழுப்ப முயற்சிப்பவர் டெல்லியில் அமர்ந்திருக்கும் உயர்மட்ட குழுவால் தங்களின் பதவியை இழக்க நேரிடும்.

சச்சின் பைலட்டின் தந்தை ராஜேஷ் பைலட் ஒரே ஒரு முறை காங்கிரஸுக்கு எதிராக குரல் எழுப்பினார். அதுவும் காங்கிரஸின் முன்னேற்றத்திற்காக தான் எழுப்பினார். அதனால், அக்கட்சி இன்று வரை சச்சின் பைலட்டை தண்டித்து வருகிறது. ராஜேஷ் பைலட் தற்போது உயிரோடு இல்லை. ஆனால், காங்கிரஸ் அவரது மகன் சச்சின் பைலட் மீது வெறுப்பு உணர்வுடன் இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சச்சின் பைலட் இன்று (23-11-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்த முறை மத்தியில்மக்கள் மாற்றத்தை பெற விரும்புகிறார்கள். ராஜஸ்தானில்மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். பா.ஜ.க தன்னுடைய சொந்த கட்சியில் உள்ள பிரச்சனைகளை மறைப்பதற்கு மற்றவர்களை குற்றம் சாட்டுகிறது. பா.ஜ.க.வில் உள்ள குழப்பத்தை அனைவராலும் பார்க்க முடிகிறது. அவர்கள் என்னை பற்றி கவலைப்படுவதை நிறுத்த வேண்டும். எனது கட்சி மற்றும் மக்கள் என்னை பற்றி கவலைப்படுவார்கள். தேர்தல் முடிவைக் காண நான் ஆவலாக இருக்கிறேன். தற்போது மாநிலத்தின் வளர்ச்சி தான் எங்களுடைய பிரச்சனை. பா.ஜ.க எப்போதுமே முக்கியமான விஷயங்களில் இருந்து வேறு விஷயங்களில் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்வார்கள். தற்போதைய விவாதம் என்னவென்றால் வளர்ச்சி, மருத்துவ சேவை, பாதுகாப்பு இதை பற்றியதாக தான் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

modi Rajasthan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe