Skip to main content

“எளிய மக்களின் கடைசி புகலிடத்திற்கும் பூட்டு” - சு.வெங்கடேசன் எம்.பி.

Published on 26/05/2025 | Edited on 26/05/2025

 

S. Venkatesan S letter to Union Finance Minister regarding RBI

தங்க நகைகள் அடமானம் வைப்பதில் ரிசர்வ் வங்கி பல்வேறு புதிய நடைமுறைகளை வெளியிட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

புதிய நடைமுறையில்,  “தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும். அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வங்கிகள் (அ) வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும். தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும். வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் வழங்க அனுமதிக்கப்படுகிறது. ஒரு கிலோவுக்கு குறைவாக உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்க அனுமதிக்கப்படும். அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப்படும். கடன் ஒப்பந்தத்தில் முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும். அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும். தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது. 

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயல் என்று திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய நிதி அமையச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “நகைக் கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்; எளிய மக்களின் கடைசி புகலிடத்திற்கும் பூட்டு. கடன் அளவு குறைப்பு, நகை அடகு வைத்தாலும் வருமானத் தகுதி நிபந்தனை, பயன்பாட்டுச் சான்று என்ற பெயரால் கடன்தாரர் உரிமை பறிப்பு, ஒவ்வொரு முறை கடனுக்கும் புதிய கடன் தகுதி பரிசீலனை எனக் கட்டணச் சுமை, நகை உடைமைச் சான்று எனப் போகாத ஊருக்கு வழி, தங்க நாணயங்களுக்கு நிபந்தனை, கடன் தொகை நிர்ணய முறைமையில் கடன் விகிதத்தில் குறைப்பு, கடனை திருப்பி கட்டினாலும் ஏழு நாள் கழித்து நகை என இழுத்தடிப்பு.

எளிய மக்களை, சிறு வணிகர்களை கழுத்தைப் பிடித்து கந்துவட்டிக்காரர்களிடமும், நகை கடன் வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தள்ளுகிற ரிசர்வ் வங்கி விதிமுறைகளை திரும்பப் பெறுமாறு கோரி ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்