Rs 350 crore seized from Congress MP's house and  Jharkhand Governor says This kind of action is needed

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. ஒடிசாவில், இவருக்கு தொடர்புடைய மதுபான ஆலை ஒன்றில் வரிஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். ஒடிசா மாநிலத்தில் எம்.பி தீரஜ் குமார் சாகுவுக்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களிலும், அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சோதனையில் எம்.பிக்கு சொந்தமான அலுவலகங்களில் 10 பீரோக்களில் 500 ரூபாய் தாள்கள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்துஎண்ணத் தொடங்கினர். இதில் தொடர்ந்து பணம் எண்ணியதால் பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. மேலும் இந்த பணியில் வருமான வரித்துறையினர், மூன்று வங்கியின் பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடிய விடிய 4 நாட்களாக எண்ணப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு ரூ.350 கோடி என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் தங்கம் மற்றும், ரொக்கங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுமத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் இவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது நாட்டிலேயே இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், இது குறித்து பேசிய ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், “வருமான வரித்துறை நடத்திய ஒரே நடவடிக்கை மூலம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகளவு பணமான ரூ.350 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எந்தவித குறிப்பிட்ட கட்சிக்கும் எதிரானது அல்ல. குற்றவாளிகள் இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால், இதுமாதிரியான நடவடிக்கை தேவை. எனவே, இது தொடர வேண்டும்” என்று கூறினார்.