/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3449.jpg)
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி 12-ஆம் தேதி நகரும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடலில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து புதுச்சேரியில் கடற்பகுதி சீற்றத்துடன் காணப்படுவதாலும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கடலுக்குச்செல்லாமல் நூற்றுக்கணக்கான படகுகளைதேங்காய் திட்டு துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் வீராம்பட்டிணம், நல்லவாடு, பூரணாங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களிலும் மீன்பிடிப் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதேபோல் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகையிலான மீன்பிடி படகுகளும் நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலில் உள்ள தங்கு கடல் படகுகள் அருகாமையில் உள்ள துறைமுகங்களுக்குப் பாதுகாப்பாகக் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி பணிகளில் ஈடுபடும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் கடலூர் துறைமுகம் மற்றும் மாவட்டத்தில் 63 கடற்கரை கிராமங்களில் 2000 பைபர் படகுகள் 500 விசைப்படகுகள் சம்பந்தப்பட்ட கிராமம் மற்றும் துறைமுகப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)