Skip to main content

மகாராஷ்டிராவில் தலைதூக்கும் இந்தி திணிப்பு பிரச்சனை; ஒன்று சேரும் எதிரி கட்சிகள்!

Published on 20/04/2025 | Edited on 20/04/2025

 

rival parties unite on Hindi imposition issue looms large in Maharashtra

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை, தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று கூறி தமிழக அரசியல் தலைவர்கள் அந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். மேலும், மத்திய பா.ஜ.க அரசு மும்மொழி கல்விக் கொள்கை என்று கூறி மறைமுகமாக இந்தியை தமிழ்நாட்டிற்குள் திணிக்க முயற்சி செய்கிறது என்று தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு குரல் வந்து கொண்டே இருக்கிறது. 

அதே சமயம் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் ஏதேனும் மூன்றாவது மொழியை கற்றுக்கொண்டால் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக் கூடும் என்று பா.ஜ.கவினர் கூறி புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான், கல்வி தொடர்பான நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டை கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும் இடையே மொழி தொடர்பான மோதல் போக்கு உருவாகி வருகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறி வருகிறது. 

இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு கடந்த 18ஆம் தேதி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம், 2025-2026 கல்வியாண்டில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5ஆம் வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே 1ஆம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை ஆங்கிலம், மராத்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை மூலம் மூன்றாவது மொழியாக தற்போது இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. 

rival parties unite on Hindi imposition issue looms large in Maharashtra

மராத்தி அதிகம் பேசும் மகாராஷ்டிராவில், இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதே சமயம் முக்கிய எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்தி திணிப்பிற்காக கடும் எதிர்ப்பை தெரிவித்தார். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில், எதிரும் புதிரும் இருந்தாக உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இணைந்து செயல்படுவதாக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ராஜ் தாக்கரே தெரிவிக்கையில், “பெரிய பிரச்சினைகள் எழும்போது, ​​எங்களுக்கு இடையேயான சச்சரவுகளும் சண்டைகளும் சிறியவை. மகாராஷ்டிராவிற்கும் மராத்தி மக்களுக்கும் இருக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில் எங்களுக்கு இடையேயான மோதல்கள் அற்பமானவை. ஒன்றிணைவது கடினமான காரியமல்ல” என்று தெரிவித்தார். அதே போல் உத்தவ் தாக்கரே தெரிவிக்கையில், “சிறிய சண்டைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மராத்தி சமூகத்தின் நலனுக்காக ஒன்று சேரவும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை உள்ளது. முதலில், மகாராஷ்டிராவின் நலன்களுக்கு எதிராக செயல்படுபவர்களை வீட்டிற்கு அழைத்து உணவு பரிமாற வேண்டாம் என்று முடிவு செய்யுங்கள், பின்னர் மட்டுமே மாநில நலனைப் பற்றி பேசுங்கள்” என்று கூறினார். 

ஒரு காலத்தில் தனது மாமாவும் மறைந்த சிவசேனா தலைவருமான பால் தாக்கரேவின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்ட ராஜ் தாக்கரே, உத்தவ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக 2005 இல் சிவசேனாவை விட்டு வெளியேறினார். அடுத்த ஆண்டு ராஜ் தாக்கரே நவநிர்மாண் சேனா கட்சியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்