Revanth Reddy speech at Prime Minister should take responsibility for this

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய இந்த தேர்தல், ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே, மூன்று கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் மே 13ஆம் தேதி அன்று 96 தொகுதிகளுக்கு நான்காம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.

Advertisment

அதில், ஆந்திரா (25), தெலுங்கானா (17), பீகார் (5), ஜம்மு (1), மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா(11), ஒடிசா(4), உத்திரப் பிரதேசம்(13), மேற்கு வங்கம்(8), ஜார்க்கண்ட்(4) உள்ளிட்ட 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், வரும் 13ஆம் தேதி 96 மக்களவைத் தொகுதிகளுடன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்தத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (11-05-24) மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது. அதன் அடிப்படையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

அந்த வகையில், தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று (11-05-24) ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு பா.ஜ.க.வில் ஓய்வு பெறுவதற்கான வயதை 75 வயதாக பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அப்படித்தான் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் மூத்த தலைவர்களுக்கு எதிராக வலுக்கட்டாயமாக முடிவுகளை எடுத்துள்ளார். நரேந்திர மோடி 74 வயதைக் கடக்க இன்னும் ஒரு வருடம் உள்ளது. அதே கேள்வியை நான் நரேந்திர மோடியிடம் கேட்க விரும்புகிறேன். 75 வயதில் ஓய்வு பெற நீங்கள் தயாரா?

நான் உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1947 முதல் 2014 வரை, 14 பிரதமர்கள், கிட்டத்தட்ட 67 ஆண்டுகளாக, 55 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். பிரதமர் மோடி 113 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார். இந்த நாட்டை, அவர் நாசமாக்கிவிட்டார். நாடு நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே, அவர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அவர் எந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தாலும், அந்த ஆவணங்களை நாங்கள் நம்பப் போவதில்லை, ஏனெனில், அவர் தேர்தலில் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வார். அவருக்கு நேர்மையோ, நம்பகத்தன்மையோ இல்லை” என்று கூறினார்.

Advertisment