/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/puducherry-file.jpg)
புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவிதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதுச்சேரியில் சென்டாக் மூலமாக நடைபெறும் மருத்துவக்கல்விச் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக புதுச்சேரி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் பரிந்துரையுடன் இது தொடர்பான கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஆளுநரின் பரிந்துரையுடன் அனுப்பி வைக்கப்பட்ட இட ஒதுக்கீடு தொடர்பான கோப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலமாக நடைபெறும் மருத்துவக்கல்விச் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக புதுச்சேரி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு துணைநிலை ஆளுநரின் பரிந்துரையோடு கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கான ஒப்புதலை மத்திய அரசு தற்போது வழங்கியுள்ளது. அதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கும் புதுச்சேரி மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த 10% இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விகனவு நனவாகும். அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இட ஒதுக்கீட்டிற்காக பணியாற்றிய முதலமைச்சர் தலைமையிலான புதுச்சேரி அரசு, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)