rescued indian student criticize indian governments efforts

உக்ரைனில் போர் பதட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து இந்தியர்களைத் துரிதமாக மீட்கும் பணிகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில், உக்ரைனிலிருந்து மீட்டு வரப்பட்ட மாணவர் ஒருவர், இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

Advertisment

இந்தியாவுக்கு அழைத்துவரப்படும் மாணவர்களை அமைச்சர்கள் "பாரத் மாதா கி ஜெய்" கோஷங்களை எழுப்பியவாறு மலர்களைக் கொடுத்து வரவேற்று வருகின்றனர். அந்தவகையில், உக்ரைனிலிருந்து விமானம் மூலம் இன்று மதியம் டெல்லி வந்தடைந்த மாணவர்களை அரசியல்வாதிகள் வரவேற்றனர். அதன்பின், மீட்டுவரப்பட்டவர்களில் ஒருவரான பீகாரைச் சேர்ந்த திவ்யான்ஷு சிங் தனியார் ஊடகத்திடம் பேசியபோது, "நாங்கள் எல்லை தாண்டி ஹங்கேரிக்குச் சென்ற பிறகுதான் எங்களுக்கு உதவி கிடைத்தது. அதற்கு முன் எந்த உதவியும் இல்லை. நாங்கள் செய்தது எல்லாம் எங்கள் சொந்த முயற்சிதான். பத்து பேர் கொண்ட குழுவாக நாங்கள் ஒன்று சேர்ந்து பயணித்தோம். எங்களது குழு ஒரு ரயிலில் ஏறித் தப்பித்தபோது, அந்த ரயில் முழுவதும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

Advertisment

உள்ளூர் மக்கள் எங்களுக்கு உதவினார்கள். யாரும் எங்களிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை. போலந்து எல்லையில் சில மாணவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது உண்மைதான். அதற்கு நமது அரசுதான் பொறுப்பு. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிட்டிருக்காது. அமெரிக்காதனது குடிமக்களை வெளியேறுமாறு முதலில் கூறியது.

இப்போது நாங்கள் இங்கே இருக்கிறோம், எங்களுக்கு இதை (ரோஜா பூக்கள்) தருகிறார்கள், இதனால் என்ன பிரயோஜனம்? இதை வைத்து நாங்கள் என்ன செய்வோம்? அங்கே எங்களுக்கு எதாவது நடந்திருந்தால், எங்கள் குடும்பங்கள் என்ன செய்திருப்பார்கள். எங்களுடன் பயணித்தவர்கள் மேப் வைத்திருந்ததால், எங்களது பயணம் ஓரளவு எளிமையாக இருந்தது. உரிய நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இப்படி எங்களுக்குப் பூக்களைக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் இதுபோன்ற நிகழ்வுகளே தேவைப்படாது. எங்கள் குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்தனர்" என்று தெரிவித்தார்.