rehana fathima booked by police for her video

தனது குழந்தைகளுடன் அரை நிர்வாண நிலையில் இருக்கும் வீடியோவை வெளியிட்ட கேரள சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

கேரளாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான ரெஹானா பாத்திமா சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர். கேரளாவில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், விதிமுறைகளை மீறி சபரிமலை கோயிலில் நுழைய முற்பட்டு போலீஸாரால் தடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மூலம் பிரபலமடைந்த ரெஹானா, அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், அண்மையில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று சர்ச்சையானதையடுத்து, அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் சிறார்நீதிச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அண்மையில் தனது யூ- ட்யூப் பக்கத்தில், தனது அரை நிர்வாண உடலில் தனது மகன் மற்றும் மகள் ஓவியம் வரையும் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார் ரெஹானா. மேலும், அந்த வீடியோவில், தன் தாயின் உடலைப் பார்த்து வளரும் குழந்தைகள் பெண்களின் உடலை அவமதிக்காது. பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால்தான் இந்தச் சமூகம் மாறும் எனத் தெரிவித்திருந்தார். அவரது இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ.க. ஓ.பி.சி. மோர்ச்சா தலைவர் ஏ.வி. அருண் பிரகாஷ் செவ்வாய்க்கிழமை இதுதொடர்பாக அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, ரெஹானா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.