தரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..? விசாரணையில் வெளியான தகவல்...

reason why pilot delayed landing of flight in kozhikode

கேரள விமான விபத்திற்கு முன்பு விமானம் தரையிறங்குவதை விமானி இரண்டு முறை ஏன் தாமதப்படுத்தினர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

துபாயிலிருந்து 191 பேருடன் கேரளா வந்த விமானம் தரையிறங்கும் போது, விபத்துக்குள்ளாகிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு கோழிக்கோடு கரிப்பூர் டேபிள் டாப் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்திற்கு முன்பு விமானம் தரையிறங்குவதை விமானி இரண்டு முறை ஏன் தாமதப்படுத்தினர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "கோழிக்கோட்டில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்த நிலையில், விமானம் முதலில் ஓடுதளம்10-இல் தரையிறங்க முயன்றுள்ளது. ஆனால், அதில் தரையிறங்க முடியாததால் ஓடுதளம் 28-இல் தரையிறங்க முயன்றுள்ளது. அதன் பின்னர் மூன்றாவது முறை மீண்டும் ஓடுதளத்தின் 10-இல் தரையிறங்கும் போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விமானிகளால் 2,000 மீட்டர் தூரத்தைதான் பார்க்க முடியும். ஆனால், ரேடார் கடுமையான வானிலை நிலவுவதை விமானிகளுக்கு உணர்த்தியது. அப்போது நிலவிய கடுமையான காற்றின் வேகம் காரணமாக இரண்டு முறை தரையிறங்க முயன்று யூடர்ன் அடித்து வந்தார்கள் விமானிகள். ஆனாலும் அவர்களால் விமானத்தைத் தரையிறக்க முடியவில்லை. அதனால் 10 ஆவது ரன்வேயில் முழு வேகத்துடன் விமானம் தரையிறங்கியது. அப்போது விமானம் நிற்காமல் சென்று பள்ளத்தாக்கில் மோதி இரண்டாக உடைந்து விழுந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

Air india Kerala
இதையும் படியுங்கள்
Subscribe