Skip to main content

"அகிலேஷுக்கு உதவ தயார்.. சோனியாவை சந்திப்பது கட்டாயமில்லை" - மம்தா பானர்ஜி!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

MAMATA

 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கடந்த திங்கட்கிழமை (22.11.2021) டெல்லி சென்றார். அங்கு அவர் முன்னிலையில் பீகார், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தனர்.

 

அதனைத்தொடர்ந்து நேற்று (24.11.2021) பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமியை சந்தித்த மம்தா, அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு பேசிய மம்தா, "மாநிலம் சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். பி.எஸ்.எஃப்-இன் அதிகார வரம்பு நீட்டிப்பு விவகாரம் குறித்தும் பேசினோம். அந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். பிரதமர் மோடியிடம் திரிபுரா கலவரம் குறித்தும் பேசினேன்" என தெரிவித்தார்.

 

இதனைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச தேர்தல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த மம்தா பானர்ஜி, "உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிக்க திரிணாமூலால் உதவ முடியுமென்றால் அங்கு நாங்கள் செல்வோம். அகிலேஷ் எங்கள் உதவியை விரும்பினால், நாங்கள் உதவி செய்வோம். நாங்கள் கோவா மற்றும் ஹரியானாவில் பாஜகவுடன் போரிட தொடங்கிவிட்டோம். ஆனால் சில இடங்களில் பிராந்திய கட்சிகள் பாஜகவுடன் போராடட்டும் என நினைக்கிறேன். நாங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டுமென அவர்கள் (சமாஜ்வாடி) விரும்பினால் நாங்கள் உதவுவோம்" என கூறினார்.

 

கடந்த முறை டெல்லி வந்திருந்த மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். ஆனால் அதன்பிறகு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காங்கிரஸ் தலைவர்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளனர். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்தச் சூழலில் தற்போது டெல்லி வந்துள்ள மம்தா, சோனியாவை சந்திக்கவில்லை.

 

இதையொட்டி சோனியாவை சந்திக்காதது குறித்து மம்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மம்தா, "அவர்கள் பஞ்சாப் தேர்தலில் மும்முரமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஏன் சோனியாவை சந்திக்க வேண்டும்? அது அரசியலமைப்பு ரீதியாக கட்டாயமில்லை" என பதிலளித்தார்.

 

மேலும் மம்தா, நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பை செல்லவுள்ளதாகவும், அப்போது மஹாராஷ்ட்ர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாரை சந்திக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

உ.பியில் அரசியல் மாற்றம்?;  பா.ஜ.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கும் அகிலேஷ் யாதவ்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Akhilesh Yadav calls BJP MLAs in uttar pradesh

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், கடந்த 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 403 இடங்கள் கொண்ட அம்மாநிலத் தேர்தலில், பா.ஜ.க 255 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 111 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில், அதிக தொகுதிகள் கைப்பற்றியிருந்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்தது. 

இந்த நிலையில், 18வது மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அந்த தேர்தலில், அதிகப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதனால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகிய கட்சிகளின் உதவியுடன் பிரதமர் மோடி கூட்டணி ஆட்சி அமைத்தார். பா.ஜ.கவின் இந்தத் தோல்வியினால், அக்கட்சி தலைமை பெரும் அதிருப்தியில் உள்ளதாக கருதப்படுகிறது. 

குறிப்பாக, பா.ஜ.கவின் கோட்டையாக இருக்கக்கூடிய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கூட பா.ஜ.க அதிக இடங்களை பெற்றிருக்கவில்லை. மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதில் பா.ஜ.க வெறும் 33 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அதிலும், ராமர் கோவில் கட்டப்பட்ட இடமான ஃபைசாபாத் தொகுதியில் கூட பா.ஜ.க படுதோல்வியடைந்திருந்தது. பா.ஜ.க பெரிதும் நம்பியிருந்த தொகுதியில் தோல்வியடைந்தது என்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. 

இதனிடையே, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், துணை முதல்வர் கே.பி.மெளரியாவுக்கும் இடையே கடுமையான மோதல் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இந்தச் சூழலில் தான், கே.பி.மெளரியா கடந்த 16ஆம் தேதி பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டாவைச் சந்தித்துப் பேசினார். இந்தப் பரப்பரப்பான சூழ்நிலையில், உ.பி அமைச்சரவையை நேற்று முன் தினம்(17-07-24) யோகி ஆதித்யநாத் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் கே.பி.மெளரியா கலந்து கொள்ளவில்லை. 

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், துணை முதல்வர் மெளரியா தனது எக்ஸ் பக்கத்தில், “அரசை விட கட்சி தான் பெரியது. தொண்டர்களின் வலி எனக்கும் வலி. கட்சியை விட பெரியவர்கள் யாரும் இல்லை. தொண்டர்களே பெருமை” எனக் குறிப்பிட்டிருந்தார். பா.ஜ.க தலைவர்களை சந்தித்த பிறகு, மெளரியா வெளியிட்ட இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்தப் பதிவின் மூலம் யோகி ஆதித்யநாத் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தச் சூழலில், உ.பி ஆளுநர் ஆனந்திபென் பட்டேலை நேற்று முன் தினம் இரவு யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Akhilesh Yadav calls BJP MLAs in uttar pradesh

தற்போது, பா.ஜ.கவில் இருக்கக்கூடிய எம்.எல்.ஏக்கள் பலர், முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. யோகி ஆதித்யநாத் ஆட்சி நடத்தும் முறையை அவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏக்களுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “மழைக்காலக் கூட்டத்தொடர் சலுகை: நூறைக் கொண்டு வாருங்கள், ஆட்சி அமைக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இது உ.பி அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம்; பிரதமருக்கு மம்தா பரபரப்பு கடிதம்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Mamata letter to Prime Minister for new criminal laws

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்தியச் சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் இப்போது வரை அமலில் இருந்தன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் என்பதை ‘பாரதிய நியாய சன்ஹிதா சட்டம்’ எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை ‘பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா’ எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை ‘பாரதிய சாக்சியா’ எனவும் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்களையும் தாக்கல் செய்தார். 

இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்களை கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி மத்திய உள்துறை அமித்ஷா மீண்டும் தாக்கல் செய்தார். மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த 3 குற்றவியல் மசோதாக்களும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த 3 புதிய குற்றவியல் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த திட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ‘உங்களது அரசாங்கம் இந்த மூன்று முக்கியமான மசோதாக்களை ஒருதலைபட்சமாகவும், எந்த விவாதமும் இல்லாமலும் நிறைவேற்றியது. அன்று, கிட்டத்தட்ட 100 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இரு அவைகளின் மொத்தம் 146 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஜனநாயகத்தின் அந்த இருண்ட நேரத்தில் எதேச்சதிகாரமான முறையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே, இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் தேதியை ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த அணுகுமுறை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்மொழியப்பட்டதை முழுமையாக ஆராய வாய்ப்பளிக்கும். மேலும், குற்றவியல் சட்டங்களை மீண்டும் நாடாளுமனறத்தில் மறு ஆய்வு செய்ய உதவும். எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.