RCB executives arrested by Tragic incident in a stampede

17 வருடத்திற்கு பிறகு முதல் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணி கடந்த 4ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதனை காண லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதி. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

35 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்தில், 2 முதல் 3 லட்சம் பேர் வந்திருந்ததால் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது என்றும், காவல்துறையை அறிவுறுத்தலையும் மீறி இந்த பேரணி நடத்தத் திட்டமிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஆர்சிபி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும் காவல்துறை அறிவுறுத்தலை மீறி வெற்றி பெற்ற அடுத்த நாளே வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியதாக ஆர்சிபி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கர்நாடகா உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

Advertisment

இத்தகைய சூழலில் தான், இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ), டி.என்.ஏ நெட்வொர்க்ஸ் மற்றும் சிலர் மீது கப்பன் பார்க் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. உயிரிழப்பு ஏற்படும் வகையில் கவனக்குறைவாகச் செயல்பட்டது, மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள், கொலைக்குச் சமமானதல்லாத குற்றவியல் கொலை என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒருவர் ஆணையம் அமைத்துள்ளதாகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறிய பெங்களூர் மாநகர காவல் ஆணையர் பி.தயானந்த், கூடுதல் ஆணையர் விகாஸ் குமார், துணை ஆணையர் சேகர் உள்பட 5 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்சிபி அணி நிர்வாகம், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisment

இந்த நிலையில், ஆர்சிபி அணி நிர்வாகிகளான நிகில் சோஸ்லே, டி.என்.ஏவின் சுனில் மேத்யூ உள்ளிட்ட 4 பேரை இன்று (06-06-25) போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.