Skip to main content

சட்டப்பிரிவு 370 ரத்து விவகாரம்;  “கூட்டாட்சி தத்துவம் என்ன ஆனது?” - ஆ. ராசா கேள்வி

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
A. Rasa questioned on Article 370 Repeal Issue

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான  மசோதாக்கள் மக்களவையில் நேற்று (12-12-23) நிறைவேற்றப்பட்டது. 

இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில், சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததில் நேற்று முன் தினம் (11-12-23) உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று பேசினார்கள். அதில் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசா, “ஜம்மு - காஷ்மீர் வழக்கில் சரியோ, தவறோ உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைக்கு வந்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளும் கட்சிக்கு அரசியல் ஊக்கத்தை வழங்கியிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், சட்டரீதியான ஆதரவையும் வழங்கியிருக்கிறது

ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபோது அரசியலமைப்பு அமைப்புகளால் வழங்கப்பட்ட கடமைகள் மற்றும் வாக்குறுதிகள் அனைத்தும் இப்போது காற்றில் பறக்கிறது. இறையாண்மை பற்றி பேசப்படுகிறது. ஆனால், ஜம்மு - காஷ்மீரில் கூட்டாட்சி தத்துவம், ஜனநாயக கடமைகள் என்ன ஆனது?. சட்டப்பிரிவு 370ஐ நீக்கப்பட்டபோது ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்தை முழுமையாக கேட்டிருக்க வேண்டும். அந்த சமூகத்தின் விருப்பங்களை முறையாக அணுகியிருக்க வேண்டும்” என்று கூறினார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

“10 ஆண்டுகளாக மோடியால் இந்தியா பாதுகாப்பாக இல்லை” - ஆ.ராசா பிரச்சாரம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
a. rasa said India is not safe for 10 years because of Modi

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில், போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.களத்தூர் கிராமத்தில், வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது பேசிய ஆ.ராசா, “கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது, முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியோ, 56 இன்ச் மோடியோ வெளியே வராத நிலையில், அதனைத் தொடர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கொரோனா பெருந்தொற்று, சென்னை பெருவெள்ளம், ஊதாரித்தனமாக எடப்பாடி செலவு செய்த 5 லட்சம் கோடி ரூபாய் கடன் என மூன்று சவால்களையும் எதிர்கொண்டார். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் படி 4 ஆயிரம் வழங்கினார்.

அதேபோல், மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை டெல்லியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து பேசினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டு, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தியது மட்டுமல்லாமல், தொடர்ந்து மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சாதத்தையும், சாம்பாரையும் கொடுத்து மதிய உணவு திட்டத்தை காமராஜ் செயல்படுத்தினார். அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர்,  காயையும்,  பருப்பையும் போட்டு சத்துணவு என்று ஆக்கினார். அது உண்மையான சத்துணவு என்று சொல்ல முடியாது. ஆனால், வாரத்தின் ஏழு நாட்களிலும் முட்டை கொடுத்து உண்மையான சத்துணவாக மாற்றியவர் கலைஞர்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காலை சிற்றுண்டியையும் வழங்கி வருகிறார். இப்படி பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிற தமிழக முதல்வர் தான் உங்களிடத்திலே பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அருண்நேருவை நிறுத்தி இருக்கிறார். ‘உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்’ என காட்சி ஊடகங்களில் வரும் விளம்பரங்களை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். எதற்காக அழைக்கிறார் என்றால் இந்தியா பாதுகாப்பாக இல்லை என்பதற்காகத் தான், காப்பாற்ற அழைக்கிறார். குரங்கு கையில் கிடைத்த பூ மாலையைப் போல, கடந்த 10 ஆண்டுகளாக மோடியால் இந்தியா பாதுகாப்பாக இல்லை. இந்தத் தேர்தல் அருண் நேருவுக்கான தேர்தலோ? ராஜாவுக்கான தேர்தலோ? அல்ல. பெரம்பலூருக்கான தேர்தலோ, தமிழ்நாட்டிற்கான தேர்தலோ அல்ல. இந்தத் தேர்தல் இந்தியாவுக்கானது. அரசியல் சட்டம் இருக்க வேண்டுமா? வேணாமா? அரசியல் சட்டம் இல்லை என்றால், இந்தியா உடைந்து விடும். ஆனால் மோடி சொல்கிறார் நான் மீண்டும் வந்தால், அரசியல் சட்டம் இருக்காது.

ஒரே மதம், ஒரே மொழி. அதுவும் இந்தி தான் இருக்கும். ஒரே உணவு, ஒரே உடை, ஒரே தேர்தல் என்று சொல்கிறார். எனவே இந்த தேர்தலில் மத்திய பாஜக அரசுக்கு பாடம் புகட்டிட பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அருண் நேருவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார். 

இதே போல, ஆ.ராசா அரும்பாவூர், லாடபுரம், செட்டிக்குளம், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரம் செய்து திமுக வேட்பாளர் அருண்நேருவிற்கு வாக்குகள் சேகரித்தார். அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரும்பாவூர் உள்ளிட்ட பல ஊர்களில் கலந்து கொண்டனர். அருண்நேருவின் அம்மா பிறந்த ஊர் அரும்பாவூர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் சேகோ பேக்டரியும், ஆலத்தூர் ஒன்றியத்தில் மருத்துவ ஆராய்ச்சி மையத்தையும் கொண்டுவருவதாக தெரிவித்தார். இந்த பிரச்சாரத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், எம்.எல்.ஏ பிரபாகரன் என திமுக கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Next Story

காஷ்மீரில் முழங்கிய பிரதமர்; சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல் பயணம் 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Prime Minister in Kashmir and First trip after cancellation of special status

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும் எதிர்ப்பும் கிளம்பியது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை கடந்த டிசம்பர் 11ஆம் தேதி வழங்கியது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கினார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் சென்றார். விமானம் மூலம் காஷ்மீரின், ஸ்ரீநகர் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவத்தின் சின்னர் கிராப்ஸ் படைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

அதன் பின்னர், ஸ்ரீநகர் பஷி மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஜம்மு - காஷ்மீரில் ரூ.6,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததன் மூலம் ஜம்மு - காஷ்மீரில் ஒரு தலைமுறைக்கான காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த புதிய காஷ்மீருக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தோம். காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே மோடியின் கியாரண்டி ஆகும். மக்கள், ஜம்மு - காஷ்மீர் வந்து தங்கள் திருமணங்களை நடத்த வேண்டும். இப்போது, உலகம் முழுவதும் உள்ள பெரிய பிரபலங்களும் ஜம்மு காஷ்மீருக்கு தைரியமாக வருகிறார்கள்” என்று கூறினார்.