Skip to main content

'ஏர் இந்தியா ஒன்' சொகுசு விமானத்தின் முதல் பயணம்... சென்னைக்கு வரும் குடியரசுத்தலைவர்...

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

ramnath kovind visits chennai in new air india one flight

 

 

குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பயணங்களுக்காக வாங்கப்பட்ட 'ஏர் இந்தியா ஒன்' விமானத்தின் முதல் பயணமாகக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தடைந்தார். 

 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பயணிப்பதற்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து பி 777 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் வாங்கப்பட்டன. அமெரிக்க அதிபரின் தனி விமானத்தில் உள்ளது போன்ற சிறப்பான பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த விமானங்கள், கடந்த அக்டோபர் மாதம் இந்தியா வந்தடைந்தன. 

 

அலுவலகப் பணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கான அரங்குகள், படுக்கை அறை, சமையல் அறை, 2,000 பேர் சாப்பிடுவதற்குத் தேவையான உணவுப் பொருட்களை வைக்கும் கிடங்கு, செயற்கைக்கோள் தொலைப்பேசி, இணைய வசதி, மருத்துவ அறுவை சிகிச்சை அறை, மருத்துவக் குழுவினர் தங்கும் அறை, பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை, முக்கிய நபர்கள் தங்கும் அறை உள்ளிட்ட சகல வசதிகளோடும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானங்கள் 8,400 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இந்நிலையில், இவ்விமானம் இன்று தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளது. இதில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவர் திருப்பதி சென்று ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போர் பதற்றம்; விமான சேவை ரத்து!

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

air india Flight to Tel Aviv canceled

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் காசா பகுதி தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்து வருகிறது. இந்த காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பை, இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இன்று காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்குப் பதிலடி தரும் வகையில், ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்ததாகவும், 908 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் போர் பதற்றம் காரணமாகப் பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்லியிலிருந்து டெல் அவிவ் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

 

Next Story

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ - ராம்நாத் கோவிந்த் ஆலோசனை

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

One country one election Ram Nath Kovind meeting

 

பல வருடங்களாகவே 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற கூற்றை மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

அதனைத் தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட உறுப்பினர்களை நியமித்து அண்மையில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதே சமயம் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

 

இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 23) ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் உள்ள ஜோத்பூர் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குலாம் நபி ஆசாத் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.