Advertisment

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயில் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த மாதிரி புகைப்படங்களைக் கோயில் கட்டுமான அறக்கட்டளை வெளியிட்டிருந்தது. ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக அயோத்தி நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மேலும், குழந்தை ராமர் கோவில் உட்பட அனைத்துக் கோவில்களும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக அயோத்தி வந்தடைந்தார். அவரை உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பூமி பூஜைக்குச் செல்லும் முன் பிரதமர் மோடி கர்கி ஹனுமான் கோவிலில் பிரார்த்தனை நடத்தினார். அடுத்ததாக குழந்தை இராமரை தரிசித்த பிரதமர் மோடி அங்கு பாரிஜாத மலர் செடியை நட்டு வைத்தார். பின்னர், பூமி பூஜை விழா தொடங்கியது. பூஜையில் கலந்துகொண்ட மோடி 40 கிலோ எடை கொண்ட வெள்ளி அடிக்கல்லை நாட்டினார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து விழா மேடைக்கு வந்த பிதமர் “ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்தீர்” எனும் அஞ்சல்தலை வெளியிட்டார். மேலும், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத் உள்ளிட்டோருடன் இணைந்து ராமர் கோவில் பூமி பூஜைக்கான நினைவுக் கல்லைத் திறந்து வைத்தார். விழா முடிவில், பிரதமர் மோடிக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் மரத்தாலான ராமர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.