Advertisment

“காங்கிரஸ் எம்.பி இருக்கையில் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” - நாடாளுமன்றத்தில் பரபரப்பு புகார்!

 Rajya Sabha Speaker complaint Money found in Congress MP's seat

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில், வக்பு சட்டத் திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன.

Advertisment

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்வி மீது மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் நேற்று வழக்கமான சோதனையின் போது, காங்கிரஸ் எம்.பி ​​அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை எண் 222-ல் இருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் பணம் மீட்கப்பட்டன. இது குறித்து சட்டப்படி விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

Advertisment

உடனடியாக எழுந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். அது அங்கீகரிக்கப்படும் வரை, அவரது பெயரைக் குறிப்பிடக்கூடாது” என்று கூறினார். இதனையடுத்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது, “இருக்கை எண் மற்றும் எம்.பி.யின் பெயரை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை அதில் என்ன தவறு இருக்கிறது? நாடாளுமன்றத்தில் பண மூட்டையை கொண்டு செல்வது ஏற்புடையதா? உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

மாநிலங்களவை தலைவர் வைத்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்வி, “மாநிலங்களவைக்கு செல்லும்போது வெறும் 500 ரூபாய் நோட்டை எடுத்துச் செல்வேன். இதைப் பற்றி நான் முதல்முறையாகக் கேள்விப்படுகிறேன். நான் மதியம் 12.57 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு வந்தேன். பின்னர், அயோத்தி எம்பி அவதேஷ் பிரசாத்துடன் மதியம் 1.30 மணி வரை கேண்டீனில் அமர்ந்து நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினேன். நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கை பூட்டப்படக்கூடிய இருக்கை இருக்க வேண்டும். ஏனென்றால் எல்லோரும் இருக்கையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் செய்யலாம். எனது இருக்கையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் என்னுடையது அல்ல” என்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களை தலைவர் வைத்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Parliament
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe