Skip to main content

மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

Rajya Sabha adjourned for the day

 

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்தk கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து ஆறாம் நாளான நேற்று வரை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவுவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் நேற்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இதற்கிடையில் மாநிலங்களவையில் இந்தியா, இந்தியா என எதிர்க்கட்சி எம்.பி.க்களும், மோடி, மோடி என பாஜக எம்.பி.க்களும் தொடர்ந்து முழக்கம் எழுப்பி இருந்தனர்.

 

இந்நிலையில் இன்று 7 வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்குக் கூடின. பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விளக்கம் அளிக்காததைக் கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர். இதையடுத்து மக்களவை நண்பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.  மாநிலங்களவையிலும் தொடர்ந்து அமளி ஏற்பட்டது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் மேஜையைத் தட்டிப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவைத் தலைவர் மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். மேலும் 31 ஆம் தேதி தேதி காலை மாநிலங்களவை மீண்டும் கூடும். மாநிலங்களவையில் உள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி அவையைச் சுமூகமாக நடத்த ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்