Skip to main content

ராஜ்புத் இயக்கத் தலைவர் கொலை; ரயில், சாலை மறியல் போராட்டம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Rajput movement leader lost his life so Rail and road strike

 

ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தவர் சுக்தேவ் சிங் சோகமெடி. இவரது வீடு ஜெய்ப்பூரில் உள்ள ஷ்யாம் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இவருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், இவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், சுக்தேவ் சிங் வழக்கம் போல் தனது வீட்டில் இருந்தார். அப்போது, திடீரென்று அவரது வீட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த சுக்தேவ் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கிடையே, சுக்தேவ் சிங் தரப்பிலும் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சுக்தேவ் சிங், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதனையடுத்து, சுக்தேவ் சிங்கின் பாதுகாவலரும், இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவத்தை நடத்திய அந்த மர்ம நபர்களைக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுக்தேவ் சிங் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

இதை தொடர்ந்து, கர்னி சேனா அமைப்பினர், சுக்தேவ் சிங்கின் கொலையை கண்டித்து  ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர், மோதபூர், பண்டி, அஜ்மீர், சவாய், கோடா, சிதோர்கர், ஜலாவர், பாரன் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் வெடித்த போராட்டம்; அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
The struggle broke out again and Set fire to the government bus in maharashtra

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா எனும் சமூகத்தினர் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனை ஏற்று கடந்த 2018 ஆம் ஆண்டு, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதாக அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு அறிவித்தது. ஆனால், மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், மாநில அரசு வழங்கிய இட ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்து தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் மராத்தா சமூகத்தினர் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். இதனிடையே, மராத்தா சமூகத்தின் செயல்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே, இட ஒதுக்கீடு கோரிக்கையை வைத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். 

அப்போது, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜ் ஜராங்கேவை சந்தித்து இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதிமொழி அளித்தார். அதனை ஏற்று மனோஜ் ஜராங்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார். ஆனால், அப்போது இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறப்பட்டது. அதனால், மனோஜ் ஜராங்கே மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய போது மராத்தா சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு, ரோட்டில் டயர்களை தீ வைத்து எரித்தனர். மேலும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரகாஷ் சோலங்கியின் வீடு மற்றும் வாகனங்களுக்குத் தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில், தனிப் பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 20ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கான இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்றும், மராத்தா சமூகத்தினர் குன்பி சாதியை சேர்ந்தவர்கள் என்ற அறிவிப்பை சட்டமாக இயற்றி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனோஜ் ஜாரங்கே மற்றும் ஆதரவாளர்கள் ஜல்னா மாவட்டம், அந்தர்வாலி சாரதி கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று (26-02-24) காலை, ஜல்னா மாவட்டத்தில் உள்ள தீர்த்தபுரி நகரின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் சவுக்கில் போராட்டக் குழுவினர், அங்கு நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது தீ வைத்து எரித்துள்ளனர். மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, சகால் மராத்தா சமாஜ் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, மனோஜ் ஜாரங்கே போராட்டத்துக்கு ஆதரவாளர்கள் கூடுவதை தவிர்க்க ஜல்னா, சத்ரபதி, சம்பாஜி நகர், பீட் ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அம்பாட் தாலுகாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது தான் உங்களின் ஜனநாயகமா?”  - ராகுல் காந்தி காட்டம்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Rahul Gandhi  questioned suppressing every voice of truth is your democracy

தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

இதனிடையே, போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அரசின் உத்தரவின் பேரில் சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக எக்ஸ் (ட்விட்டர்) இன்று (22-02-24) தெரிவித்துள்ளது. 

இது குறித்து, எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் உலக அரசுகள் விவகார பிரிவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க, குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை இந்தியாவில் மட்டும் நிறுத்தி வைப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், கருத்துச் சுதந்திரம் என்பது இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. 

எக்ஸ் நிறுவனம் பதிவை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது பதிவில் மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறீர்கள். இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேட்டால் அவர்களின் பேச்சை கேட்பதை கிடையாது. முன்னாள் ஆளுநர் உண்மையைக் கூறினால் அவர் வீட்டுக்கு சி.பி.ஐயை அனுப்புகிறீர்கள். 

மிக முக்கிய எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குகிறீர்கள். 144 தடை, இணையத்தடை, விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உண்மைக் குரல்களை நசுக்குவது தான் உங்களின் ஜனநாயகமா?. மோடி அவர்களே, நீங்கள் ஜனநாயகத்தை கொன்றுவிட்டீர்கள் என்பது பொதுமக்களுக்கு தெரியும். அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.