ADVERTISEMENT

ராஜ்புத் இயக்கத் தலைவர் கொலை வழக்கு; வெளியான அதிர்ச்சி தகவல்!

04:06 PM Dec 12, 2023 | mathi23

ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தவர் சுக்தேவ் சிங் சோகமெடி. இவரது வீடு ஜெய்ப்பூரில் உள்ள ஷ்யாம் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இவருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், இவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி சுக்தேவ் சிங் வழக்கம்போல் தனது வீட்டில் இருந்தார். அப்போது, திடீரென்று அவரது வீட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த சுக்தேவ் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கிடையே, சுக்தேவ் சிங் தரப்பிலும் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சுக்தேவ் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ADVERTISEMENT

இதனையடுத்து, சுக்தேவ் சிங்கின் பாதுகாவலரும் இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவத்தை நடத்திய அந்த மர்ம நபர்களைக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுக்தேவ் சிங் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதைத் தொடர்ந்து, கர்னி சேனா அமைப்பினர், சுக்தேவ் சிங்கின் கொலையை கண்டித்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, சுக்தேவ் சிங் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த வகையில், கொலை செய்த மர்ம நபர்களான 3 நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி இரவு குற்றப்பிரிவு மற்றும் சண்டிகர் காவல்துறை ஆகியோர் சேர்ந்து குற்றவாளிகள் 3 பேரை சண்டிகரில் வைத்து கைது செய்தனர்.

அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்தவர்கள் ரோஹித் ரத்தோர், நிதின் ஃபெளஜி மற்றும் உதம் எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்களை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஏழு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டவர் கனடாவைச் சேர்ந்த ரோஹித் கோதாரா என்பது தெரியவந்தது. மேலும், அவர் தனது எதிரிகளை சுக்தேவ் சிங் ஆதரித்ததற்காக கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இவர் மீது பல குற்ற வழக்குகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கர்னி சேனா அமைப்பு தலைவர் சுக்தேவ் சிங்கை கொலை செய்வதற்கான ஆட்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பை மகேந்திர மேக்வால் என்ற நபரிடம் ரோஹித் கோதாரா வழங்கியுள்ளார். மகேந்திர மேக்வாலும் அவருடைய மனைவியான பூஜா சைனி என்பவரும் சுக்தேவ் சிங்கை கொலை செய்வதற்காக ரோஹித் ரத்தோர், நிதின், ஃபெளஜி ஆகிய 3 பேரை வரவழைத்து அவர்களுக்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கியுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் மூன்று பேரும் சுக்தேவ் சிங்கின் நெருங்கிய நபரான ஷெகாவத் என்பவர் மூலம் சுக்தேவ் சிங்கிடம் நட்பு பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த 5 ஆம் தேதி, சுக்தேவ் சிங்கின் வீட்டிற்குச் சென்ற அவர்கள் சில நிமிடங்கள் சுக்தேவ் சிங்கிடம் பேசியிருக்கின்றனர். அதன் பின்னர், யாரும் எதிர்பாராத விதமாக தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வைத்து திடீரென சுக்தேவ் சிங்கை சரமாரியாகச் சுட்டுத் தப்பி ஓடியுள்ளனர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுதம் வழங்கிய பூஜா சைனி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் பூஜா சைனி சட்ட விரோதமாக ஆயுதக் கடத்தல் வேலை செய்து வருகிறார் என்பது தெரியவந்தது. அவரது கணவரான மகேந்திர மேக்வால் தலைமறைவாக இருப்பதால் அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT