Skip to main content

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார் ராஜீவ் குமார்! 

Published on 15/05/2022 | Edited on 15/05/2022

 

Rajiv Kumar takes over as Chief Election Commissioner of India

 

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். 

 

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சுஷில் சந்திராவின் பதவிக் காலம் முடிவடைந்திருக்கும் நிலையில், ராஜீவ் குமார் இந்தியாவின் 25- வது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் இன்று (15/05/2022) பொறுப்பேற்றுக் கொண்டார். 

 

2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல், குடியரசுத்தலைவர் தேர்தல், துணை குடியரசுத்தலைவர் தேர்தல், பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மேற்கு வங்கத்தில் புதிய டி.ஜி.பி. நியமனம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
New DGP in West Bengal Appointment

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) பிற்பகல் நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.

அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு, முதன்முறையாகத் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தது. அதில், மேற்கு வங்க மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக பொறுப்பு வகித்து வந்த ராஜீவ் குமாரை நீக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி கூறுகையில், “ராஜீவ் குமார் (டி.ஜி.பி.) ஆட்சியில் இருக்கும் கட்சியின் (திரிணாமுல் காங்கிரஸ்) குறிப்பாக அரசின் முகமாக இருந்தார். அரசின் உத்தரவின்றி அவர் பணிபுரிய மாட்டார் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள, டி.ஜி.பி.யாக இருந்தும் மக்களின் குறைகளை கேட்காததால், பல புகார்களை பதிவு செய்துள்ளோம். இது நல்ல முடிவு. இது எங்களுக்கு மகிழ்ச்சி” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரியான விவேக் சஹாய் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில உள்துறை செயலாளர்களையும் மாற்ற உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; தேர்தல் ஆணையத்தை நாடிய ஓ.பி.எஸ்.!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High Court action verdict; OPS sought the Election Commission

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ. பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்தது.

High Court action verdict; OPS sought the Election Commission

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று (18.03.2024) அளித்த தீர்ப்பில், “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தரத் தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இடைக்கால நிவாரணமாக மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) கட்சி சார்பாக படிவம் ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் எனவும் அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.