
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலை நடத்தியது, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பு என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வந்தது.
அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா கடந்த மே 7ஆம் தேதி நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி தாக்குதல் நடத்தியது. மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. தொடர்ந்து போர் பதற்றம் தணிந்து வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இனிப்பு கடையில் 'மைசூர் பாக்' என்ற பெயரில் இருந்து 'பாக்' என்ற வார்த்தையை நீக்கப்பட்டு அதற்கு பதிலாக 'ஸ்ரீ' என சேர்க்கப்பட்டு 'மைசூர் ஸ்ரீ' என காட்சிப் படுத்தப்பட்டுள்ளது வைரலாகி வருகிறது.
இந்த பெயர் மாற்றம் குறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில், 'நாங்கள் தயாரிக்கும் இனிப்பு பண்டங்களில் 'பாக்' என்ற வார்த்தையே இருக்கக்கூடாது என நீக்கி விட்டோம். மைசூர் பாக் மட்டுமல்லாது மோதி பாக் என்பதை 'மோதி ஸ்ரீ' என்றும், அதேபோல் கோண்ட் பாக் என்பதை 'கோண்ட் ஸ்ரீ' என்றும் மாற்றியுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
இதில் 'பாக்' என்பது பாகிஸ்தானை குறிக்கவில்லை இனிப்பின் பாகு தன்மையைக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.