/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dsaa.jpg)
சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ க்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதித்துள்ள ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சச்சின் பைலட் மற்றும் அவருக்கு ஆதரவான 18 எம்.எல்.ஏக்கள் கடந்த வாரம் தொடர்ச்சியாக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டங்களைத் தவிர்த்ததன் காரணமாக, அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைப் புறக்கணித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளை ஏற்றுச் சபாநாயகர் சி.பி. ஜோஷி அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொண்டு சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேரைத் தகுதிநீக்கம் செய்வதற்கான நோட்டீஸை அனுப்பினார்.
ஆனால், சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சச்சின் பைலட் சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கட்சிக்குள்ளான கருத்து வேறுபாடுகளை இத்தகைய கடும் நடவடிக்கைகளால் ஒடுக்குவது பேச்சு சுதந்திர மீறல் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சச்சின் பைலட் மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஜூலை 24 வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும், இந்த வழக்கில் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்தனர். இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் ஜோஷி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)