Skip to main content

பஞ்சாபை தொடர்ந்து வேளாண் சட்ட எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றும் ராஜஸ்தான்...

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

rajasthan to pass bill against farm lawsrajasthan to pass bill against farm laws

 

பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலமும் வேளாண்சட்ட எதிர்ப்பு மசோதாக்களை நிறைவேற்றும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

 

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், 'வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா', 'விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா', 'அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா' ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மூன்று மசோதாக்களும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தப் புதிய சட்டத்திற்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

 

மேலும், இந்தச் சட்டத்திற்கு எதிராகப் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நான்கு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது பஞ்சாப் அரசு. இதற்காகக் கூட்டப்பட்ட அம்மாநிலச் சட்டசபை சிறப்புக் கூட்டத்தில், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலமும் வேளாண்சட்ட எதிர்ப்பு மசோதாக்களை நிறைவேற்றும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "சோனியா காந்தி, ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி, நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்காக முழுமையாகத் துணை நின்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறைவேற்றிய விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை எதிர்க்கும். இன்று பஞ்சாப் காங்கிரஸ் அரசு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது, அதைத்தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்றும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Aam Aadmi MP joined BJP!
ஜே.பி. நட்டா உடன் சுஷில் குமார் ரிங்கு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சுஷில் குமார் ரிங்கு மற்றும் அம்மாநில எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் இன்று (27.03.2024) தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர். இது குறித்து சுஷில் குமார் ரிங்கு கூறுகையில், “ஜலந்தரின் வளர்ச்சிக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். ஜலந்தரை முன்னோக்கி கொண்டு செல்வோம். மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஜலந்தருக்கு கொண்டு செல்வோம். ஜலந்தர் மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது உண்மைதான், ஏனெனில் எனது கட்சி (ஆம் ஆத்மி) எனக்கு ஆதரவளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செயல்பாடுகளால் நான் ஈர்க்கப்பட்டேன்.

Aam Aadmi MP joined BJP!
ஜே.பி. நட்டா உடன் ஷீத்தல் அங்குரல்

மேலும் பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்குரல் கூறுகையில், “இப்போது அவர்களை (ஆம் ஆத்மியை) அம்பலப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. பஞ்சாப் மக்களிடம் ஆம் ஆத்மி பொய் கூறியுள்ளது. ஆபரேஷன் தாமரை தொடர்பான ஆதாரங்களை விரைவில் கொண்டு வருவேன்” எனத் தெரிவித்தார். ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் பாஜகவில் இணைந்தது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சுஷில் குமார் ரிங்கு மற்றும் ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

Next Story

அதிவேக விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High speed train derailment accident in rajasthan

பர்மதி - ஆக்ரா விரைவு ரயில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று (17-03-24) மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. அதில், ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. 

இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து வடமேற்கு ரயில்வே மண்டலம் தெரிவிக்கையில், ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தால், ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.