Rajasthan Governor's speech Jodha - Akbar marriage is a myth

Advertisment

முகலாயப் பேரரசர் அக்பருக்கும், ராஜபுத்திர இளவரசி ஜோதா பாய்க்கும் இடையிலான திருமணம் ஒரு கட்டுக்கதை என ராஜஸ்தான் மாநில ஆளுநர் ஹரிபாவ் பகடே தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பொது நிகழ்வு ஒன்று நடந்தது. இந்த நிகழ்வில் அம்மாநில ஆளுநர் ஹரிபாவ் பகடே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “முகாலயப் பேரரசர் அக்பரும், ராஜபுத்திர இளவரசி ஜோதா பாயும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த கதையைப் பற்றி ஒரு திரைப்படமும் எடுக்கப்பட்டது. வரலாற்று புத்தகங்களும் அதையே கூறுகின்றன. ஆனால், அது ஒரு பொய். பர்மல் என்ற ஒரு மன்னர் இருந்தார், அவர் ஒரு வேலைக்காரி மகளை அக்பருக்குதிருமணம் செய்து வைத்தார். அக்பரின் ஆட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘அக்பர்நாமா’வில் ஜோதா மற்றும் அக்பரின் திருமணம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

ஆங்கிலேயர்கள் நமது ஹீரோக்களின் வரலாற்றை மாற்றினர். அவர்கள் அதை முழுமையாக எழுதவில்லை. அவர்களின் வரலாற்றின் பதிப்பு ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர், சில இந்தியர்கள் வரலாற்றை எழுதினார்கள், ஆனால், அதில் ஆங்கிலேயர்களின் அழுத்தம் இருந்தது. மகாராணா பிரதாப் தனது சுயமரியாதையை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. வரலாற்றில், அக்பரைப் பற்றி அதிகமாகவும், மகாராணா பிரதாப்பைப் பற்றி குறைவாகவும் கற்பிக்கப்படுகிறது.

Advertisment

இந்த தவறுகளை எல்லாம் சரிசெய்யும் முயற்சிகளால் நிலைமை இப்போது மேம்பட்டு வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ், நமது கலாச்சாரத்தையும் புகழ்பெற்ற வரலாற்றையும் பாதுகாத்து எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் புதிய தலைமுறையை தயார்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்.