ADVERTISEMENT

முதல்வரின் கடிதத்தை இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பிய ஆளுநர்... தொடரும் ராஜஸ்தான் அரசியல் குழப்பங்கள்...

03:46 PM Jul 27, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்கும் வகையில் சட்டப்பேரவையைக் கூட்ட அனுமதி கோரி, ஆளுநரிடம் சமர்ப்பித்த இரண்டாவது கடிதத்தையும் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவதால், அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சச்சின் பைலட்டை யாரும் எதிர்பாராத விதமாக கட்சியிலிருந்தும், துணை முதல்வர் பதவியிலிருந்தும் காங்கிரஸ் கட்சி நீக்கியது. இந்நிலையில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 19 பேரைத் தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சச்சின் பைலட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முயன்று வருகிறார் அசோக் கெலாட். இதற்காக ஆளுநரிடம் அனுமதி கோரி அவர் அண்மையில் கடிதம் சமர்ப்பித்த சூழலில், கடிதத்தில் அவையைக் கூட்ட விரும்பும் தேதி, அதற்கான சரியான காரணம் உள்ளிட்டவை கூறப்படவில்லை எனக்கூறி அந்த கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இந்த சூழலில், சட்டப்பேரவையை வரும் 31-ம் தேதி கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க விரும்புவதாக இரண்டாவது கடிதத்தை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு அனுப்பினார் அசோக் கெலாட். ஆனால் இந்த கடிதத்தையும் தற்போது ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளதாக ராஜஸ்தான் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியைக் கலைப்பதில், ஆளுநர் பாஜகவுக்கு உதவுகிறார் என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், ஆளுநரின் இந்த செயல் காங்கிரஸ் வட்டாரத்தில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT