ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கிடையே உட்கட்சி மோதல் வெடித்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 தொகுதிகளை கைப்பற்றி படுத்தோல்வி அடைந்தது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மக்களவை தொகுதியை கூட காங்கிரஸ் கட்சியால் கைப்பற்ற முடியவில்லை. மக்களவை தேர்தல் தோல்வி குறித்து டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான அசோக் கெலாடிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்து தனது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா கடிதத்தை கமிட்டி குழுவிடம் வழங்கினார். ஆனால் அதனை குழு உறுப்பினர்கள் நிராகரித்தனர் என்ற செய்தி வெளியாகியது.
ராஜஸ்தான் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் " ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கு துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சச்சின் பைலட் தான் காரணம் என பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும் தேர்தல் தோல்விக்கு சச்சின் பைலட் முழு பொறுப்பை ஏற்க வேண்டும். குறைந்த பட்சம் தனது மகன் தோல்விக்காவது சச்சின் பைலட் பொறுப்பேற்க வேண்டும் " என தெரிவித்துள்ளதால், காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி பைலட், கேலாட் என இரு குழுவாக செயல்பட்டதே தேர்தல் தோல்விக்கு காரணம் என்ற செய்தியும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதே போல் சச்சின் பைலட்டிற்கு நெருக்கமான தொகுதியாக கருதப்படும் ஜோத்பூர் மக்களவை தொகுதியில் தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் போட்டியிட்டு சுமார் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனை குறித்து காங்கிரஸ் கட்சி தலைமையும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், கருத்து மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.