Advertisment

குடியிருப்புகளைச் சூழ்ந்த மழைநீர்; மீட்பு பணியில் இறங்கிய ராணுவ வீரர்கள்!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்துள்ளது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இது தொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக் குறையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisment

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 50 சென்டிமீட்டர் மழையும், புதுச்சேரியில் 46 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதுவே இதுவரை பதிவான மழையின் அளவுகளின் தரவுகளின் அடிப்படையில் அதிகபட்சமாகும். இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி 21 சென்டிமீட்டர் மழை புதுவையில் பதிவாகியிருந்தது. தற்போது 46 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதே சமயம் புதுச்சேரியில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தோடு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

Advertisment

அதோடு கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் புதுச்சேரி அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி சுமார் 150க்கு மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. அதோடு கடற்கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களையும் நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கும் உரிய ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்துள்ளன. முன்னெச்சரிக்கையாக நேற்றிரவு துண்டிக்கப்பட்ட மின்சாரம், தற்போது வரை மீண்டும் மின்சாரம் வழங்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி கூறுகையில், “பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் 50 செ.மீ மழை பெய்துள்ளதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து வருகிறேன். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தார். அதே சமயம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியரின் கோரிக்கையின் பேரில், வெள்ள நிவாரணப் பணிகளை இந்திய ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

heavy rain indian army Puducherry rangasamy Rescue
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe