railway police warned the woman who made the train Instagram reels

இன்ஸ்டாகிராமில் வட இந்திய பிரபலமாக இருப்பவர் சீமா கனோஜியா. 27 வயதான இவர் டிக்டாக்கில் தொடங்கி இன்ஸ்டாகிராம் வரை நகைச்சுவை, லிப்ஸ் சிங் மற்றும் பொழுதுபோக்கு வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அதன் மூலம், இன்ஸ்டாகிராமில் கால்பதித்த 3 ஆண்டுகளிலேயே 6 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்ஸ்களை தக்க வைத்துள்ளார். இதன் காரணமாக வட இந்தியாவில் காமெடி கேட்டகிரியில் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சராகவே வலம் வருகிறார். அதிலும், சீமா கனோஜியா வீடியோவில் தோன்றி பேசும் போது வாக்கியங்களுக்கு இடையில் ஹஹஹா.... எனச் சொல்லி தான் பேசுவார். இதற்கென்றே வட இந்தியவில் சீமா கனோஜியாவிற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

Advertisment

இவர், இன்ஸ்டாகிராமில் அதிகம் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் ரயில் நிலையங்கள், ரயிலினுள் மற்றும் மெட்ரோ வளாகங்கள் போன்ற இடங்களில் பயணிகள் மற்றும் பொதுமக்களைதொந்தரவு செய்கிற வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அது மட்டுமல்லாமல், பொதுமக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு சென்று ரொமாண்டிக் பாடலுக்கு ரீல்ஸ் செய்து பொதுமக்களை தொந்தரவு செய்வதாகவும், சீமா கனோஜியா மீது விமர்சனம் வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி சீமா கனோஜியா மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தில், 'மேரா தில தேரா தீவாநா' என்ற ஐஸ்வரியா ராயின் பாலிவுட் பாடலுக்கு ரயில்வே நடைமேடையில் குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.

Advertisment

அந்த ரீல்சை ரயில்வே போலீசாருக்கு ஷேர் செய்த நெட்டிசன்கள், ''ரயில் நிலையங்கள், ரயிலினுள் மற்றும் மெட்ரோ வளாகங்கள் என ரீல்ஸ் மோகம் கொண்டவர்களால், சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் சமீப காலமாக தொந்தரவுகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதற்கான லேட்டஸ்ட் உதாரணம் தான் சீமா கனோஜியா. இவர் பாலிவுட் பாடல்களை ஒலிக்கவிட்டு ரயில் நிலைய பயணிகளுக்கு தொடர்ந்து தொந்தரவாகும் வகையில் ரயில் மேடைகளில் நடனமாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சீமா மீது கடுமையாக நடவடிக்கை எடுப்பதன் மூலம் மற்றவர்களுக்கு அது பாடமாகவும் அமையும்'' எனக் கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அந்த சர்ச்சைக்குரிய ரீல்ஸில், ரயிலில் இருந்து நடைமேடையில் குதிக்கும் சீமா கனோஜியா சக பயணிகள் மத்தியில் தனது வழக்கமான குத்தாட்டத்தை ஆட ஆரம்பித்தார். அப்போது, சக ஆண் பயணிகள் இருவர் மீது இடித்துக்கொள்கிறார். இதைச்சற்றும் எதிர்பாரத பயணிகள் சீமா கனோஜியாவை அதிர்ச்சியில் பார்க்க, அதையெல்லாம் கண்டுகொள்ளா சீமா கனோஜியா கேமராவை பார்த்து குத்தாட்டம் போடுகிறார். இதையடுத்து, இந்த ரீல்ஸ் வைரலாகவே ரயில்வே போலீசார் கவனத்திற்கு சென்றது.

அதனைத் தொடர்ந்து, சீமா கனோஜியா வீடியோவின் மீது விசாரணை செய்த மத்திய ரயில்வே துறை அதிகாரிகள், சீமா கனோஜியாவை கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி ரயில்வே நிலையம் அழைத்தனர். அவரிடம், பேசிய ரயில்வே போலீசார் பொது இடங்களில் ரீல்ஸ் மோகம் கூடாது என எச்சரித்தனர். இதையடுத்து, சீமா கனோஜியா போன்று தவறான வழியில் வீடியோ பதிவிடும் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்களை எச்சரிக்கை செய்ய முடிவு எடுத்த போலீசார், அவருக்கு வித்தியாசமான தண்டனை தந்தனர். அதன்படி, சீமா கனோஜியாவை வைத்தே பொதுஇடங்களில் ரீல்ஸ் மோகம் கூடாது என்ற அறிவுறுத்தல் வீடியோ ஒன்றினை போலீசார் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடச்செய்தனர். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

அந்த வீடியோவில் உருக்கமாக பேசியசீமா கனோஜியா, ''சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் நான் எடுத்த வீடியோ வைரலாகி 70-80 மில்லியன் பார்வைகளைக் குவித்தது. ரயில்வே மேடைகளில் இதுபோன்ற வீடியோக்களை செய்யக் கூடாது. இது நெறிமுறையற்றது மற்றும் குற்றமாகும். என்னை போன்ற அனைத்து யூடியூபர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள் யாரும் இதுபோன்ற வீடியோக்கள் உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என கூறினார். இதையடுத்து, ரயில்வே போலீசாரிடம் எழுத்து பூர்வமான மன்னிப்பு கடிதத்தையும் சீமா கனோஜியா சமர்ப்பித்தார். அதன் பின்னர், வீடு திரும்பினார். இதையடுத்து, சீமா கனோஜியா தொடர்ந்து பதிவிட்டு வரும் ரீல்ஸ் பற்றி பேசிய சட்ட வல்லுநர்கள், ''இரயில்வே சட்டம் பிரிவு 152 மற்றும் 153 இன் கீழ் ரயில் நிலையங்களில் பயணிகளை காயப்படுத்துதல், காயப்படுத்த முயற்சித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றமாகும். மீறினால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். சீமா கனோஜியாவின் மீதான ரயில் போலீசார் ஒழுங்கு நடவடிக்கை மற்ற இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்களுக்கு பாடமாக அமையும்'' என கருத்து தெரிவித்தனர்.

மும்பை ரயில் நிலையங்களில் ரீல்ஸ் என்ற பெயரில், சக பயணிகளுக்கும், ரயில்வே சேவைக்கும் இடையூறாக செயல்பட்ட இன்ஸ்டாகிராம் இளம்பெண்ணை வைத்தே, அவரை ஒத்த இதர ரீல்ஸ் மோகம் கொண்ட இளசுகளுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுவித்த சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.