Railway Ministry announce Aadhaar mandatory for Tatkal ticket booking

ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ரயில் நிலையங்கள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டை முன்பதிவு செய்து பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதில், தட்கல் முறையில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது இடைத்தரகர்களின் குறுக்கீடு காரணமாக சாமானிய மக்களால் முன்பதிவு செய்ய முடியவில்லை என தொடர்ந்து புகார் எழுந்தது.

இந்த நிலையில், தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் சரிபார்ப்பு கட்டாயம் என ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அதன் பின்னர், ஜூலை 15ஆம் தேதி முதல் தட்கல் முன்பதிவுக்கு ஆதார் அடிப்படையிலான ஓடிபி (OTP) அங்கீகாரமும் கட்டாயமாக்கப்படும்.

Advertisment

இந்திய ரயில்வேயின் கணினிமயமாக்கப்பட்ட பிஆர்எஸ் (PRS) கவுண்டர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், பயனர் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் ஓடிபி (OTP) அங்கீகாரத்திற்குப் பிறகு தான் தட்கல் டிக்கெட் முன்பதிவு வழங்க முடியும். இது 15-07-2025 முதல் செயல்படுத்தப்படும். இந்திய ரயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள், ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவு தொடங்கிய முதல் முப்பது நிமிடங்களில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதாவது, ஏசி இல்லாத வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் 10: 30 மணி வரையிலும், ஏசி இல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணி முதல் 11: 30 மணி வரையிலும் தொடக்க நாள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். சிஆர்ஐஎஸ் (CRIS) மற்றும் ஐஆர்சிடிசி (IRCTC) ஆகியவை அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும் இதை அறிவிக்கப்பட்டு, அமைப்பில் தேவையான மாற்றங்களைச் செய்யும். பொதுமக்களின் தகவலுக்காக மேற்கண்ட மாற்றங்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் பரவலான விளம்பரம் வழங்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.